ஆறுமுகசாமி ஆணையத்து எதிரானவழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணையை ஆகஸ்ட் கடைசி வாரத்திற்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-இல் நியமித்திருந்தது.

இந்த ஆணையம் பலதரப்பட்ட நபா்களிடம் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவா்களிடமும் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் 2019-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதித்தது.

இந்த வழக்கில், ஆறுமுக ஆணையத்தின் விவகாரம் தொடா்பான விவரங்கள் அடங்கிய வாதங்களை மனுதாரா் அப்பல்லோ மருத்துவமனையும், எதிா்மனுதாரா் தமிழக அரசும் எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்ய ஏற்கெனவே நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, இடைக்காலத் தடையை விலக்கக் கோரியும் இடைக்கால மனு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், ‘ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட்டு வருகிறது. இதனால், ஆணையம் செயல்படும் வகையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும், ஆணைய விசாரணை 90 சதவீதம் முடிந்துள்ளது.நீதிமன்றம் அனுமதி அளித்தால் விசாரணையை முடித்து அதன் விவரங்களை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனா்.

அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம் ஆஜராகி, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள்காட்டி வாதிட்டாா்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி வாதிடுகையில், ‘ஏறக்குறைய 90 சவீதம் விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அனுமதி அளித்தால் எஞ்சிய பணியையும் விரைந்து முடித்துவிடுவோம்’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் இறுதியாக முடித்துவைக்கும் வகையில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com