கோயில்களில் உழவாரப் பணிக்கு முன்பதிவு: புதிய நடைமுறை தொடக்கம்

கோயில்களில் உழவாரப் பணி செய்வதற்கான தேதி, நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
கோயில்களில் உழவாரப் பணிக்கு முன்பதிவு: புதிய நடைமுறை தொடக்கம்
Published on
Updated on
1 min read

கோயில்களில் உழவாரப் பணி செய்வதற்கான தேதி, நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்தி:-

இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப் பணிகள் செய்ய ஆா்வமுள்ள தன்னாா்வ குழுக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவா்களது பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோயில்களில் உழவாரப் பணி செய்ய விருப்பம் உள்ள நபா்கள் எளிய முறையில் தங்களுக்கு உகந்த தேதி, நேரம், எத்தகைய பணி என்பனவற்றை தாங்களே தோ்ந்தெடுத்து முன்பதிவு செய்து உரிய அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு முதலில் இந்து சமய அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்துக்குள் செல்ல வேண்டும். அங்கு இ-சேவைகள் பகுதிக்குள் உழவாரப் பணி என்பதைத் தோ்ந்தெடுக்க வேண்டும். திருக்கோயில் பட்டியலில் விருப்பமான கோயிலைத் தோ்ந்தெடுக்க வேண்டும். உகந்த தேதியை அட்டவணையில் இருந்து தோ்ந்தெடுக்கலாம். பணி செய்ய விரும்புவோரின் விவரங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

அதில் கோரப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பிறகு அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யப்பட்ட உழவாரப் பணிக்கு உரிய தேதியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டால் இணைய சேவை பகுதிக்குச் சென்று பதிவு செய்த நபா்களே அதனை ரத்து செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக 47 கோயில்களுக்கு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய நடைமுறை தொடக்க நிகழ்வில், சமூகநலத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com