தெருவில் கிடக்கிறேன் - வைரல் பாட்டியின் சிரிப்புக்கு பின்னால் ஒரு சோகம்!

தெருவில் கிடக்கிறேன் - வைரல் பாட்டியின் சிரிப்புக்கு பின்னால் ஒரு சோகம்!

நான்கு 500 ரூபாய்த் தாள்களை ஒரு கையிலும் மளிகைப் பொருள்களை மற்றொரு  கையிலும் அணைத்தவாறு வெள்ளந்தியான அவருடைய சிரிப்புதான் ஹைலைட்!

ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழ்கூறும் ஊடக நல்லுலகம் முழுவதும் விறுவிறுப்பாகப் பரவியது இந்தப் பாட்டியின் புகைப்படம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பினால் பெற்ற கரோனா நிவாரணத் தொகையான நான்கு 500 ரூபாய்த் தாள்களை ஒரு கையிலும் மளிகைப் பொருள்களை மற்றொரு  கையிலும் அணைத்தவாறு வெள்ளந்தியான அவருடைய சிரிப்புதான் ஹைலைட்!

இந்தப் பாட்டியின் படத்துடன் மேலும் சிலருடைய படங்களையும் சேர்த்து, ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு என்று பெருமிதத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலினே தம் முகநூல், டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார்.

ஒரு நாளில் உலகைக் கலக்கிய, அனைவராலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்த பொக்கை வாய்ச் சிரிப்புக்குச் சொந்தமான இந்தப் பாட்டி யார்?

வேலம்மாள்!

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கீழ கலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 90), இவருடைய கணவர் தர்மலிங்கம், 20 ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.

இவருக்கு அருள்மணி (54) என்ற மகளும், பால்மணி (47) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பால்மணி உள்ளூரிலேயே சரக்கு ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அருள்மணி திருப்பூரில் தனது மகள் வீட்டுடன் சென்றுவிட்டார்.

கீழகலுங்கடியில் மகள் இருந்தபோது அவருடன் வேலம்மாள் வசித்து வந்தார். பின்னர், சிறிது காலம் மகனுடனும் இருந்துள்ளார். பின்னர் ஏனே பிடிக்காமல்போகவே தற்போது அதே ஊரில் உள்ள தனது தங்கையின் வீட்டுத் திண்ணையில் தங்கிக் கொள்கிறார். வெயிலாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் இந்தத் திண்ணைதான் பாட்டிக்கு அரண்மனை.

குடும்ப அட்டைதாரர்களுக்கான கரோனா நிவாரண உதவியான 2 ஆவது தவணை ரூ. 2 ஆயிரம், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பினை வாங்கிய வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றார். அவர் ரூபாய் நோட்டுகள் மற்றும் மளிகைப் பொருள்களுடன் அவர் சிரித்த படம்தான் வைரலாகப் பரவுகிறது. 

வேலம்மாள் பாட்டி என்ன கூறுகிறார்:

"எனக்கு சொந்த ஊர் கலுங்கடிதான். இங்குதான் பிறந்து வளர்ந்ததெல்லாம்."

உங்கள் கணவர் இறந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்று கேட்டதற்கு ஓர்மை (நினைவு) இல்லை என்கிறார்.

"எனக்கு இங்கு தேவாலயத்தில் உள்ள பாதிரியார் தினமும் உணவு கொண்டு வந்து தருவார். எங்கள் ஊரில் உள்ளவர்கள் காசு தருவார்கள் அதைக் கொண்டு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன். மகன் உள்ளூரில் இருந்தாலும் ஒத்துப் போகாததால் எனது தங்கை வீட்டுத் திண்ணையில் தங்கிக்கொள்கிறேன்.

"மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும் படுக்கை விரிப்பைக் கொண்டு போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவேன். கட்டில் எல்லாம் கிடையாது. இந்தத் திண்ணை மட்டும்தான். 

"எனக்குக் கண் சரியாகத் தெரியவில்லை. நான் இங்கு தனியாகத்தான் இருக்கிறேன். தெருவில் படுத்திருக்கிறேன். எனவே, தமிழக முதல்வர் எனக்கு தங்குவதற்கு ஒரு வீடு தந்தால் நன்றாக இருக்கும். எனது ஆயுள் காலம் வரை நன்றியுள்ளவளாக இருப்பேன்.

"தமிழக அரசு அளித்துள்ள இந்த பணம் எனக்கு பம்பர் பரிசு கிடைத்ததுபோல். இந்தத் தொகையை தேநீருக்காக, சாப்பாட்டிற்காக செலவு செய்கிறேன். மேலும் இந்த பணத்தைக் கொண்டு ஜவுளிக் கடை திறந்தவுடன் நல்ல சேலையாக எடுத்துக்கொள்வேன்" என்கிறார் வேலம்மாள் பாட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com