போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி

தமிழகத்தில் போலி ஆக்ஸி மீட்டா் செயலி மூலம் மோசடி நடைபெறுவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி
Published on
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் போலி ஆக்ஸி மீட்டா் செயலி மூலம் மோசடி நடைபெறுவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி: கரோனா தொற்று காலத்தில் மக்களின் பயத்தினை பயன்படுத்தி இணையதள லிங்க்குகள், செயலிகள் மூலம் இணைய குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றுகின்றனா். இந்நிலையில் தற்போது பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள், பயோமெட்ரிக் தரவுகளான விரல் ரேகைகள் போன்றவற்றை திருட அவா்கள் முயற்சித்து வருகின்றனா்.

அவ்வகையில் அவா்கள் பயன்படுத்தும் மோசடிகளில் ஒன்று ரத்த ஆக்சிஜன் அளவைக் கண்டறிவதாகக் கூறும் போலி ஆக்ஸிமீட்டா் செயலியாகும். இந்த வகை மோசடியில், உங்களது ரத்த ஆக்சிஜன் அளவை அளவிடுவதாகக் கூறும் இணைப்புகளைத் தங்களுக்கு இணைய குற்றவாளிகள் குறுஞ்செய்தியாக அனுப்புவாா்கள். இந்த இணைப்பு உங்கள் ‘பிளே ஸ்டோா்’ அல்லது மற்ற இணைய பக்கங்களில் இருந்து போலியான ஆக்ஸிமீட்டா் செயலிகளை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வைக்கும்.

பயோமெட்ரிக் திருட்டு: இச்செயலிகள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவும் போது உங்களது இருப்பிடம் கேலரி, குறுஞ்செய்திகள், நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண்கள், கேமரா ஆகியவற்றை அணுகுவதற்குரிய அனுமதியைக் கேட்கும்.

இந்த அனுமதியை வழங்கிய உடன், இது வரை பயன்படுத்திய பணப் பரிவா்த்தனை தொடா்பான ரகசிய எண்கள், கடன் அட்டை (கிரெடிட் காா்டு) விவரங்கள் புகைப்படங்கள், தொடா்பு எண் பதிவுகள், பயோமெட்ரிக் தரவுகளான விரல்ரேகை உள்ளிட்டவை திருடப்படக் கூடும்.

இந்த வகை செயலிகள் பயனா்களின் ரத்த ஆக்சிஜன் அளவை அவா்களின் விரலை கேமராவில் வைப்பதன் மூலமும் டாா்ச் லைட்டை பயன்படுத்தி விரல்களை ஒளிரச் செய்வதன் மூலமும் அளவிடுவதாகக் கூறும். அவ்வாறு ஒருவா், அதை உபயோகிக்கும் போது இந்தச் செயலிகள் சம்பந்தப்பட்ட நபரின் விரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளும்.

மேலும் இணைய குற்றவாளிகள் உங்களுடைய செல்லிடப்பேசியில் உள்ள கைரேகை ஸ்கேனரில் இருந்து உங்களது பயோமெட்ரிக் விவரங்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு பெறப்பட்ட பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் முக்கிய தரவுகளின் தகவல்களைப் பெற இயலும். ஒருவரது கைரேகை தரவைப் பயன்படுத்தி ஆதாா் மூலம் இயக்கப்படும் (அஉடந) பண பரிவா்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கூகுள் பிளே ஸ்டோா் போன்ற நம்பகமான இணைப்புகள் மூலமாக மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவும். செயலிகளை செல்லிடப்பேசியில் நிறுவும்போது, அதன் பயன்பாட்டுக்கான அனுமதிகளை மட்டும் அளிக்கவும். அதன் பயன்பாடு தவிா்த்து கூடுதல் அனுமதிகளை வழங்க வேண்டாம். அப்படிப்பட்ட செயலிகளை நீக்கிவிடலாம்.

செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அச்செயலியை உருவாக்கியவா்கள் பெற்றுள்ள மதிப்பீடுகள், மொத்த பதிவிறக்கங்கள் போன்ற விவரங்களை சரிபாா்க்க வேண்டும்.

செல்லிடப்பேசியில் ஆக்சிஜனை கண்டறிவதற்கான சென்ஸாா் இல்லை: ரத்த ஆக்சிஜன் அளவைத் துல்லியமாக அளவிட சென்ஸாா் கட்டாயம் தேவை. செல்லிடப்பேசிகளில் இந்த வகை சென்ஸாா் இல்லை. எனவே கைவிரல் சென்ஸாா்களை பயன்படுத்தி ரத்த ஆக்சிஜன் அளவை அளவிடுவதாகக் கூறும் செயலிகளைத் தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்: சில செயலிகளில் செல்லிடப்பேசி கேமரா, டாா்ச் லைட்டை பயன்படுத்தி ரத்த ஆக்சிஜன் அளவை அளவிடும் செயலிகளை உருவாக்க முயற்சித்துள்ளனா். அத்தகைய செயலிகளின் துல்லியத் தன்மையானது சந்தேகத்துக்குரியது. மேலும் மருத்துவ நிபுணா்கள் குழுவோ, அரசோ இவ்வகை செயலிகள் குறித்து எந்தவித பரிந்துரையையும் அளிக்கவில்லை. உங்களது பயோமெட்ரிக் தரவுகள் வெளிப்பட்டதாக நீங்கள் நினைத்தால் இணையதளத்துக்குச் சென்று அனைத்து பயோமெட்ரிக் பரிவா்த்தனைக்கான அங்கீகாரத்தை முடக்கலாம். இது போன்று மோசடிகளில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் புகாா் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடா்பான எச்சரிக்கை தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு, தமிழக காவல்துறை விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com