மதுரையில் ஏழு தளங்களுடன் நவீன நூலகம்: அமைச்சர் எ.வ. வேலு

மதுரையில் அமைய உள்ள நவீன நூலகம் தரை மற்றும் ஏழு தளங்களுடன சுமார் இரண்டு லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
மதுரையில் அமையும் நவீன நூலகம் ஏழு தளங்களுடன் கட்ட முடிவு: அமைச்சர் எ.வ. வேலு  
மதுரையில் அமையும் நவீன நூலகம் ஏழு தளங்களுடன் கட்ட முடிவு: அமைச்சர் எ.வ. வேலு  
Published on
Updated on
1 min read

மதுரை: மதுரையில் அமைய உள்ள நவீன நூலகம் தரை மற்றும் ஏழு தளங்களுடன சுமார் இரண்டு லட்சம் சதுர அடியில் கட்டப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாக மதுரையில் அவரது பெயரில் நவீன நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து இந்த நூலகம் அமைப்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில்,  உலக தமிழ் சங்க வளாகம்,  அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி,  புட்டுத்தோப்பு, எல்லீஸ் நகர் ஆகிய இடங்கள் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை  பள்ளிக் கல்வி மற்றும் நூலகத் துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் ஆய்வு செய்தார்.  இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சனிக்கிழமை இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  சென்னையில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் பிரம்மாண்ட நூலகம் செயல்பட்டு வருவதை போல மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் நவீன நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இருக்கிறோம். ஒவ்வொரு இடங்களின் சாதக பாதக அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து பொருத்தமான இடங்களை முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம் . நூலகம் அமைப்பதற்கான இடத்தை முதல்வர் இறுதி செய்வார்.

 தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைவது மிகவும் பொருத்தமானது. இந்த நூலகம் சுமார் 2 லட்சம் சதுர அடியில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் நவீன நூலகமாக அமைக்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் 24 பிரிவுகளாக இந்த நூலகத்தை அமைக்க உள்ளோம். ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் இந்த நூலகம் கட்டப்பட உள்ளது. இடம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணிகள் துவங்கி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றார். 

இந்த ஆய்வின் போது தமிழக அமைச்சர்கள் கே .ஆர். பெரியகருப்பன், பி.மூர்த்தி,  பி.டி .ஆர். பழனிவேல் தியாகராஜன்,  பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com