மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் குளு குளு காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் குளு குளு காலநிலை நிலவி வருவதால் வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றுக்குள் செல்லும் தண்ணீரில் விளையாடி மகிழும் குழந்தைகள்.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றுக்குள் செல்லும் தண்ணீரில் விளையாடி மகிழும் குழந்தைகள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் குளு குளு காலநிலை நிலவி வருவதால் வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் அக்னி நட்சத்திர காலம் முடிவடைந்தும் வெயில் கொளுத்தி வந்தது.

இதனால் மக்கள் வீடுகளில் புழுக்கம் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். அவ்வப்போது வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து இப்பகுதிகளில் தென்றல் காற்று வீசி வந்தது.

ஆனாலும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாததால் மக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்க முடியாமல் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை மானாமதுரை பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.  அதைத்தொடர்ந்து மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கதிரவன் உதயம் கண்ணுக்குத் தெரியாமல் வானம் மப்பும் மந்தாரமுமாக வெயில் முகம் தெரியாமல் குற்றாலம், கொடைக்கானல் போன்று குளுகுளு காலநிலை நிலவியது.

பல நாள்களாக வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த இப்பகுதி மக்களுக்கு இந்த குளுகுளு காலநிலை மாற்றம் இதமாக இருந்தது.

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மானாமதுரையில் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு செல்கிறது.

பல மாதங்களுக்கு பின்னர் வைகையில் தண்ணீர் செல்வதை பார்த்த திருப்புவனம், மானாமதுரை பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்து அங்கு கரையோரமாக செல்லும் தண்ணீரில் குழந்தைகளை விளையாட விட்டு ரசிக்கின்றனர்.

மானாமதுரை அருகே முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய இடங்களில் வைகை ஆற்றுக்குள் குடிநீர் திட்டங்கள் செயல்படுவதால் அங்கே மணல் வளம் கொள்ளை போகாமல் உள்ளது.

இதனால் இப்பகுதிகளில் ஆற்றுக்குள் செல்லும் தண்ணீரின் அழகு பார்த்து ரசிக்கும் படியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com