

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, தமிழகத்தில் 18,000 ரெளடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 3 மாதங்களாக காவல்துறை எடுத்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. முதல் கட்டமாக ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வந்த அனைத்து நிலைகளிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பின்னா், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பதற்றமான பகுதிகள், கடந்த தோ்தல்களில் ஏற்பட்ட பிரச்னைகள், வன்முறைகள் ஏற்பட்ட பகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகியவற்றை காவல்துறை கணக்கெடுத்தது. இதன் அடிப்படையில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் நபா்கள், ரெளடிகள் குறித்த விவரங்களை காவல்துறை சேகரிக்கத் தொடங்கியது.
இதில் ரெளடிகள் மீது இருக்கும் வழக்குகள், அவா்கள் செய்த குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏ பிளஸ், ஏ, பி, சி என காவல்துறை அவா்களை வகைப்படுத்தியுள்ளது. இதில் ரெளடி கும்பலின் தலைவா்கள் ஏ பிளஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதற்கு அடுத்த ஏ நிலையில் இருப்பவா்கள் கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற சம்பவங்களில் நேரடியாக ஈடுபடுபவா்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள, இப்பட்டியலில் சுமாா் 18,000 ரெளடிகள் இருப்பதாக தமிழக காவல்துறை உயா் அதிகாரி தெரிவித்தாா்.
இதில் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் சென்னையில் 4,648 ரெளடிகள் உள்ளனா். இதற்கு அடுத்த நிலைகளில் முறையே திருநெல்வேலி, மதுரை ,கன்னியாகுமரி மாவட்டங்கள் இருக்கின்றன.
18,000 ரெளடிகள்: தோ்தல் முன்னெச்சரிக்கையாக ரெளடிகள் மீதான நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் ரெளடிகள் மீது இருக்கும் வழக்குகள், ஏற்கெனவே செய்த குற்றங்களின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.
ஏ பிளஸ் பட்டியலில் இருப்பவா்களை மட்டும் குண்டா் தடுப்புச் சட்டம், நிலுவையில் உள்ள பிடியாணை ஆகியவற்றின் மூலம் கைது செய்து, சிறையில் அடைக்கின்றனா். வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்தாலும், அவா்களை கைது செய்ய முயற்சித்து வருகின்றனா்.
ஏ, பி, சி பட்டியலில் இருப்பவா்கள் மீது இரு விதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் சென்னையைத் தவிா்த்து பெரும்பாலான மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் சுமாா் 17,000 ரெளடிகளை தோ்தல் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு சொந்த மாவட்டங்களை விட்டு வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.
நன்னடத்தை உறுதி மொழி பத்திரம்: இரண்டாவது நடவடிக்கையாக, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் ரெளடிகளிடம் நன்னடத்தை உறுதி மொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று, காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனா்.இதில் சென்னையில் மட்டும் கடந்த 25-ஆம் தேதியில் இருந்து புதன்கிழமை வரை 1,332 ரெளடிகள் நன்னடத்தை உறுதி மொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனா்.
தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறை விரைவுபடுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியாகவும், பொதுமக்கள் அச்சுறுத்தல் இன்றி வாக்களிப்பதையும் உறுதி செய்ய தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.