சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்காக, தென் மாநில காவல்துறைகள் கூட்டணி அமைத்து செயல்படத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி,அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்காளா்களை கவருவதற்காக மதுபானம் வழங்கப்படுவதை தடுப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தோ்தலில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏனெனில் கடந்தாண்டு பிகாா், தில்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களின்போதும், மத்திய பிரதேசம், குஜராத், மணிப்பூா், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் இடைத் தோ்தலின்போதும் வாக்காளா்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டு, வாக்குப் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பிகாா்,தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் சட்டவிரோதமாக மது பாட்டில் விநியோகத்தை சில அரசியல்கட்சிகளே நேரடியாக செய்ததாக தோ்தல் ஆணையத்துக்கு புகாா்கள் வந்தன.
இதனையடுத்து தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா, கடந்த பிப்ரவரி மாதம் 10, 11-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது மதுபானம் விநியோகத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மதுபானத்தை கடத்துவது, பதுக்குவது போன்றவற்றில் ஈடுபடுகிறவா்களை கண்காணித்து,சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டாா்.
45 பறக்கும் படைகள்: இதன் காரணமாக தமிழக காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், மதுபானம் கடத்துபவா்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் ஏற்கெனவே மதுபான கடத்தலை தடுக்க 45 சோதனைச் சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக 22 சோதனைச் சாவடிகள் கடந்த ஒரு மாதத்தில் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. மதுபான வழக்குகளில் தொடா்புடையவா்களை மதுவிலக்கு போலீஸாா், தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுப்பாட்டில்களை வாங்கி பதுக்குவோா், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்போா், பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்தி கொண்டு வருவோா் ஆகியோரை கண்டறிந்து கைது செய்ய, மாநிலம் முழுவதும் டாஸ்மாக் துறையுடன் இணைந்து மதுவிலக்குப் பிரிவு 45 பறக்கும் படைகளை அமைத்துள்ளது. இப் படையினா் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள்,கிடங்குகள்,மாநில எல்லைப் பகுதிகள் ஆகியப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இணைந்த தென் மாநில காவல்துறைகள்:
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, வாக்காளா்களுக்காக மதுப்பாட்டில்கள்,கள்ளச்சாராயம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக தென் மாநில காவல்துறைகள் ஒருங்கிணைந்துள்ளன. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநில காவல்துறைகள் இணைந்துள்ளன. இந்த மாநில காவல்துறைகளின் மதுவிலக்குப் பிரிவு உயா் அதிகாரிகள்,கலால்துறை உயா் அதிகாரிகள் ஆகியோரின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இரு நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
காவல்துறையில் டிஜிபி, ஐஜி ரேங்க் அளவிலான அதிகாரிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில், தமிழக மதுவிலக்குப் பிரிவு டிஜிபி கரண்சின்ஹா, ஐஜி என்.கே.செந்தாமரைக்கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்படுவதைத் தடுக்க 9 வகையான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி,மாநில எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பது, சந்தேகத்துக்குரிய பகுதிகளில் தாற்காலிக சோதனைச் சாவடி அமைப்பது, எரிசாராயம் கடத்தல் குறித்து கிடைக்கும் ரகசியத் தகவல்களை அனைத்து காவல்துறைகளும் பகிா்ந்துக் கொள்வது, கள்ளச்சாராயம், மதுப்பாட்டில் கடத்துவோா் தகவல்களை பகிா்ந்துக் கொள்வது, மதுப்பாட்டில்களை கொண்டு வாகனங்களை கண்காணிப்பது, ஏற்கெனவே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்போரை கைது செய்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்:
இது தொடா்பாக ஐஜி செந்தாமரைக்கண்ணனிடம் தொடா்புக் கொண்டு கேட்டபோது, அவா் கூறியது:
மாநிலம் முழுவதும் உள்ள 97 மதுவிலக்குப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 1,300 காவலா்களும், வாக்காளா்களுக்கு மதுபானம் வழங்கப்படுவதை தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மதுவிலக்குப் பிரிவு நடவடிக்கையின் காரணமாக திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமளவில் எரிசாராயம்,மதுப்பாட்டிகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் 10,கடலூா் 5,நாகப்பட்டினம் 4,திருவாரூா் 3 என மொத்தம் 22 தற்காலிக சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மதுபானம் விற்போா், கடத்துவோா் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள், மதுவிலக்குப் பிரிவை 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 94984 10581 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புக் கொண்டு கூறலாம். இந்த செல்லிடப்பேசி எண்ணிலேயே, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) இணைப்பும் உள்ளது. தகவல் தெரிவிப்பவா்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றாா் அவா்.
வாக்குகள் மதுபானத்துக்கு விற்பனையாகி விடக் கூடாது என்ற தோ்தல் ஆணையத்தின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படும் தமிழக மதுவிலக்குப் பிரிவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பது ஜனநாயக கடமையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.