ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

டீக்கடை அரசியல்...

வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற பிறகு, திடீரென டீ கடைக்குள் புகும் அந்த அதி முக்கிய பிரமுகர் அங்குள்ள அனைவருக்கும் தேநீர் போட்டுத் தருகிறார்

News image
Updated On :15 மார்ச் 2021, 5:53 am

கே.பாலசுப்பிரமணியன்

வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற பிறகு, திடீரென டீ கடைக்குள் புகும் அந்த அதி முக்கிய பிரமுகர் அங்குள்ள அனைவருக்கும் தேநீர் போட்டுத் தருகிறார். இதனால் அந்த தேநீர் கடையும், அங்கிருந்தவர்களும் பரபரப்புக்கு உள்ளாகிறது. இது நடந்த இடம், பொதுத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம். அங்கு மட்டுமல்ல...தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பரப்புரை ஈடுபடும் பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பாசத்துக்குரிய இடமாக மாறியிருக்கிறது தேநீர் கடைகள்.

 தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பிரசாரத்துக்காக அண்மையில் வந்து சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என அனைவரும் தேநீர் கடைகளுக்குச் சென்று அங்குள்ள தேநீரையும், உணவையும் அருந்தியுள்ளனர். தேநீர் கடைகளுக்கு வரும் சாதாரண பொது மக்கள், அரசியல்வாதிகளை மையப்படுத்தி அரசியல் நிகழ்வுகளைப் பேசுவது வழக்கம். ஆனால் இப்போது அரசியல்வாதிகளே தேநீர் கடைகளுக்குள் செல்வது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 அரசியல் நடவடிக்கைகளுக்கும், தேநீர் கடைகளுக்கும் நீண்டகாலமாகவே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கூறுகிறார், சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இ.சுந்தரம். தேநீர் கடைக்கும், அரசியலுக்குமான தொடர்பை அவுன்ஸ் அளவுக்கு சுருக்கமாக அவர் கூறியது:-
 சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களின் மிகுந்த கண்காணிப்புக்கு உரிய இடங்களில் தேநீர் கடைகளும் ஒன்றாக இருந்தது. தேநீர் அருந்த வருவோர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சதிச் செயல்களை தீட்ட முற்படலாம் என்று கருதியே தேநீர் கடைகளை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் பிரிட்டிஷ்காரர்கள். அந்தக் காலத்தில் ஒரு தேநீர் கடையைத் தொடங்க வேண்டுமென்றால் அவ்வளவு எளிதல்ல. காவல் துறையிடம் உரிமம் பெற வேண்டும்.

 இந்த உரிமத்துக்கு ஒருசில நிபந்தனைகள் இருக்கின்றன. அரசியல் ரீதியான நடவடிக்கைகளைப் பேசக் கூடாது. ஈடுபடக் கூடாது. அரசியல் தொடர்புள்ள நபர்களுக்கு உரிமம் தரக்கூடாது என்ற நோக்கத்திலேயே காவல் துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டுமென்ற ஒரு தடுப்பை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வைத்திருந்தனர்.

 ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பல நடைமுறைகளை நாம் தொடர்ந்து வருவதைப் போன்று, தேநீர் கடைகளுக்கான உரிமம் பெறுவதில் காவல் துறையின் அனுமதியையும் பெற வேண்டும் என்பது சுதந்திரத்துக்குப் பிறகும் இருந்து வந்தது. அதன்பின்பு, திமுக ஆட்சிக் காலத்தில்தான் காவல் துறையின் அனுமதி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

 அரசியல்வாதிகள் தங்களது கடைகளுக்கு வந்து தேநீர் அருந்துவது கடைக்கு ஒரு விளம்பர வெளிச்சத்தை ஏற்படுத்தித் தரும் என்பது உண்மைதான் எனக் கூறிய சுந்தரம், தனது கடைக்குக் கூட பாஜகவைச் சேர்ந்த குஷ்பு வந்து தேநீர் அருந்தியதாகத் தெரிவித்தார்.

 தாங்களும் வெகுஜன மக்களில் ஒருவர்தான் என்பதை சாமானிய மக்கள் செல்லும் தேநீர் கடைகளுக்குச் சென்று நிரூபித்து வருகிறார்கள் வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள். வெற்றிக்குப் பிறகும் அவர்களின் அரசியல் கதைகளைப் பேசும் தேநீர் கடைகளை மறக்காமல் இருந்தால் சரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.