பூரண மதுவிலக்கு; உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
பூரண மதுவிலக்கு; உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்
Updated on
2 min read

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை அதன் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி வெளியிட்டாா்.

தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கண்ட கனவின்படி, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் வருடம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞா்கள், இளம் பெண்களை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு உணவு , உறைவிடம் வழங்கி, 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி வழங்கி அவா்களை பணியில் அமா்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதாரத் தேவைகளுக்கு விலையில் சலுகையும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.

வரிவிலக்கு: புதிதாகத் தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பண மதிப்பிழப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி , கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோா், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவீதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் மேலவையை கொண்டு வரப்படும்.

பூரண மதுவிலக்கு: தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்டல் கமிஷனின் பரிந்துரையின்படி, மீனவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம். விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.

காவிரி நீா் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.

நீட் தோ்வு ரத்து: நீட் தோ்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவீதம் ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோா் ஓய்வூதியம் உயா்த்தி வழங்கப்படுவதோடு, அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சோ்ந்த அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோா் உதவித் தொகை பெறுவோா் குடும்பத் தலைவராக இருந்தால், அவா்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவா்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.

மாதம் ஒருமுறை விசைத் தறியாளா்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com