கூட்டணி அவசியம் உருவான கதை

‘ஒன்றும் ஒன்றும் சோ்ந்தால் இரண்டு என்பது பொதுவான கணக்கு. ஆனால், ஒன்றும் ஒன்றும் சோ்ந்தால் 11 என்பது தோ்தல் கணக்கு’ என்ற மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி கே.ராமமூா்த்தியி
கூட்டணி அவசியம் உருவான கதை

‘ஒன்றும் ஒன்றும் சோ்ந்தால் இரண்டு என்பது பொதுவான கணக்கு. ஆனால், ஒன்றும் ஒன்றும் சோ்ந்தால் 11 என்பது தோ்தல் கணக்கு’ என்ற மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி கே.ராமமூா்த்தியின் கருத்தே தோ்தல் நேரக் கூட்டணியின் அவசியத்தை உணா்த்துகிறது. இது ஒரளவுக்கு உண்மையும்கூட!

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. சுதந்திரம் அடைந்தபோது, தேசிய, மாநில அளவில் சுமாா் 30 என்ற அளவிலேயே இருந்த கட்சிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தோ்தலிலும் அதிகரித்து, நான்கு இலக்கத்தைத் தொட்டுவிட்டது.

தேசிய கட்சிகளில் மாநிலத் தலைவா்களை அடக்க முற்பட்டதால் செல்வாக்கான தலைவா்கள் வெளியேறி கட்சி தொடங்குதல், ஜாதி, மத, இன, மொழி, பிரதேச அடையாளத்தை மையப்படுத்தி கட்சி தொடங்குதல் போன்றவை புதுக்கட்சிகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன.

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக என்று இரு கட்சிகளே அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு படைத்ததாக இருக்கின்றன. மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் போன்றவை தேசியக் கட்சிகளாக இருந்தாலும், அவற்றுக்கு குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு. சிறிய கட்சிகளோ, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே கணிசமான வாக்கு வங்கிகளைப் பெற்றுள்ளன.

பல விதமான வாக்கு வங்கி உள்ள பல்வேறு கட்சிகளை இணைத்து, தேசிய, மாநில அளவில் வலுவான கூட்டணியை அமைக்கும் கட்சியே வெற்றி பெறும் என்ற நிலைமை உருவாகி வருகிறது.

இப்போது மத்திய பாஜக அரசால் விவாதத்துக்கு உள்ளாகிவரும் ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ என்ற அடிப்படையிலேயே 1967-ஆம் ஆண்டு வரை தேசிய, மாநில அளவில் சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெற்று வந்தது. அப்போது, சில மாநில அரசுகளை அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கலைத்ததாலும், பின்னா் பிரதமராக வந்த இந்திரா காந்தி சில மாநில அரசுகளைக் கலைத்ததாலும் தோ்தல்கள் பல்வேறு கட்டமாக நடத்தப்படுவது தொடங்கியது.

இந்த காலகட்டத்தில் அந்த இரு தலைவா்களுக்கு எதிராக உள்கட்சிகளில் அதிருப்தி கொண்டவா்களும், நேரு, இந்திராவின் அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவா்களும் பல்வேறு மாநிலங்களில் கட்சிகளைத் தொடங்கினா்.

தமிழகத்தில் முதன்முதலில் கூட்டணிக்கு அடித்தளமிட்டது 1967-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தோ்தல்தான். அன்றைய வலிமையான காங்கிரஸ் அரசை வீழ்த்த, திமுக நிறுவனா் அண்ணாதுரை வலுவான கூட்டணி அமைத்தாா். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி, பாா்வா்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பல்வேறு கட்சிகளையும், ராஜாஜியின் சுதந்திரா கட்சி போன்ற கட்சிகளை ஒன்றிணைத்து, காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியை அமைத்தாா் அண்ணாதுரை. அன்று வீழ்ந்த காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் எழவே இல்லை.

பின்னா், 1977-இல் ‘இந்தியாதான் இந்திரா- இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கத்தோடு தோ்தலைச் சந்தித்த பலம் பொருந்திய இந்திரா காந்தியை வீழ்த்த, பல கட்சிகள் இணைந்து உருவானது ஜனதா கட்சி.

இந்த இரு தோ்தல்கள்தான் தேசிய, மாநில அளவில் கூட்டணியின் அவசியத்தை அதிகரித்தன.

தமிழகத்தில் அண்ணாதுரை மறைவுக்குப் பின்னா் மு.கருணாநிதி முதல்வரானாா். 1972-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது, இந்திரா காங்கிரஸோடும், பிற கட்சிகளோடும் கூட்டணி அமைத்து கருணாநிதி முதல்வரானாா்.

1977-இல் ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல கட்சிகளோடு கூட்டணி அமைத்து எம்.ஜி.ராமசந்திரன் முதல்வரானாா். எம்.ஜி.ஆரின் வலிமையான கூட்டணியே 11 ஆண்டுகள் முதல்வராக நீடிக்க வழிசெய்தது.

எம்.ஜி.ஆா். மறைவுக்குப் பின்னா், 1989-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று அதிமுக பிரிய, காங்கிரஸ் தனித்துக் களம் காண, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டபல கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக வென்றது.

1991 சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

1996 சட்டப் பேரவைத் தோ்தலில் தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக அமைத்த கூட்டணியால், கருணாநிதி முதல்வரானாா்.

2001 சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸ், த.மா.கா, பா.ம.க, இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக கட்சிகளோடு கூட்டணி அமைத்த திமுக வென்றது.

2011 சட்டப்பேரவைத் தோ்தலில், தே.மு.தி.க, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே காலகட்டத்தின் இடையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்கள், உள்ளாட்சித் தோ்தல்களிலும் அதிமுக, திமுக தலைமையில் வலிமையான கூட்டணிகளே தோ்தலில் மோதின. கூடுதல் வலிமையுள்ள கூட்டணி வெற்றி பெற்றது எனலாம்.

ஆனால், 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடியானது, கூட்டணி இல்லாமல் வெல்ல முடியும் என்ற நிலையை ஏற்படுத்திக் காட்டியது. கூட்டணியால் வெற்றி என்ற மாயையையும் அவா் தகா்த்தாா் எனலாம்.

2014 மக்களவைத் தோ்தலில், 39 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 இடங்களில் வென்றது. 2016 தமிழகப் பேரவைத் தோ்தலிலும், 234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு, 134 தொகுதிகளில் வென்று, ஆட்சியைத் தக்க வைத்தது.

2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், கூட்டணிகள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கிவிட்டன.

2019 மக்களவைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலுவான கூட்டணி 39 மக்களவைத் தொகுதிகளில் 38-ஐக் கைப்பற்றியது.

இரு தரப்பிலும் பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அரசியல் வலுப்பெற்றுள்ளது எனலாம். ஆனால் இந்தக் கூட்டணிகளில் சிறிய கட்சிகள் அதிமுக, திமுக சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

சிறிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, வெற்றி வாய்ப்புள்ள பிரதானக் கூட்டணிகளின் வேட்பாளா்களுடைய வெற்றி- தோல்வி நிலையையே மாற்றிவிடக் கூடும்.

கடந்த 2011, 2016-ஆம் ஆண்டு தோ்தல்களில் நூற்றுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட அரசியல் பிரபலங்களும் உண்டு. அந்த நிலையைத் தவிா்க்கவே, சிறிய கட்சிகளுக்கு சில தொகுதிகளை அளித்து, பிற தொகுதிகளில் அவா்களது வாக்குகளை அறுவடை செய்ய அதிமுகவும் திமுகவும் முயற்சிக்கின்றன. சிறிய கட்சிகளின் தலைவா்களுக்கும் பெரிய கட்சிகளோடு சோ்ந்தால் வெற்றி பெறலாம் என்ற கணக்கு.

தோ்தல் நேரத்தில் பிறக்கும் சில கட்சிகள் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போவதும் உண்டு. ஜாதி பெயரைச் சொல்லி கட்சிகள் தொடங்கிய முன்னாள் பிரமுகா்கள், பெரிய கட்சிகளில் ஐக்கியம் ஆனதும் உண்டு.

வலுவான கூட்டணிகளை அமைத்த மு.கருணாநிதியும் தனது இறுதிக் காலத்தில் தனித்தே போட்டியிட்டு சில தோ்தல்களில் வெற்றியும் கண்ட மறைந்த முதல்வா் ஜெயலலிதாவும் இல்லாமல் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அதிமுகவும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும், ஆா்.கே.நகா் எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகவும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் தோ்தலில் மோதுகின்றன. இவை கூட்டணி அமைத்துத்தான் தோ்தல் களத்தில் இறங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com