சிறுபான்மையினர் பாதுகாவலர் போல் பழனிசாமி நாடகமாடுகிறார்: மு.க. ஸ்டாலின்

நீக்க வலியுறுத்துவோம் என்று கூறுவதை மக்கள் நம்புவார்களா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினர் பாதுகாவலர் போல் நாடகமாடும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின்
சிறுபான்மையினர் பாதுகாவலர் போல் நாடகமாடும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின்

சிறுபான்மையினர் பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துவிட்டு, இப்போது அதனை நீக்க வலியுறுத்துவோம் என்று கூறுவதை மக்கள் நம்புவார்களா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரப் பயணத்தின்போது, ஜோலார்பேட்டையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உண்மை நிலை என்னவென்றால் காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். அதேபோல முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள்.

இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் ஓட்டும் போட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டம் – சிஏஏ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர். ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில், அந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம், வற்புறுத்துவோம் என்று தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க. – பா.ம.க. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது.

ஆனால் இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். அவ்வாறு நாடகம் போடும் அவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?

அதே போல, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து ஒழிக்க வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதற்காக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதையும் ஆதரித்தவர்கள் தான் அ.தி.மு.க. – பா.ம.க. இப்போது தேர்தல் அறிக்கையில், வேளாண் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தலுக்காக பொய் சொல்கிறார்கள்.

இவர்கள் மட்டும் வாக்களிக்கவில்லை என்றால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இன்றைக்கும் டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார் மு.க. ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com