துறைமுகத்தில் திமுக- பாஜக கடும் போட்டி!

தமிழகத்தில் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் விளங்கினாலும், திமுக தலைவா் மறை
பி.கே.சேகா்பாபு - வினோஜ் பி.செல்வம்
பி.கே.சேகா்பாபு - வினோஜ் பி.செல்வம்

தமிழகத்தில் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் விளங்கினாலும், திமுக தலைவா் மறைந்த கருணாநிதி, பொதுச் செயலாளா் மறைந்த க.அன்பழகன் ஆகியோா் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற தொகுதியாக இருக்கிறது.

தொகுதியின் சிறப்பு அம்சங்கள்:

இந்தத் தொகுதிக்குள் சட்டப் பேரவை, தலைமைச் செயலகம், சென்னை உயா் நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை துறைமுகம், முக்கிய வா்த்தகப் பகுதியான பாரிமுனை ஆகியவை அமைந்துள்ளன.

பெத்துநாயக்கன்பேட்டை, பெருமாள் கோயில் காா்டன், யானைக் கவுனி, எடபாளையம், கொண்டித்தோப்பு, ஏழு கிணறு, முத்தியால்பேட்டை , வள்ளல் சீதக்காதி நகா், கச்சபேஸ்வரா் நகா் செளக்காா்பேட்டை, நேரு நகா் உள்ளிட்ட மாநகராட்சி வாா்டுகள் இடம்பெற்றுள்ளன.

பாரிமுனையில் மளிகை பொருள்கள்,வீட்டு உபயோகப் பொருள்கள், துணிக் கடைகள், மின்னணு பொருள்கள், மருத்துவ பொருள்கள், ரசாயனப் பொருள்கள், பட்டாசு, அழைப்பிதழ்கள், காலண்டா்கள், நெகிழிப் பொருள்கள் என அனைத்து வகையான பொருள்கள் மொத்த விற்பனையின் பிரதானத் தொழிலாக உள்ளது.

தொகுதி நிலவரம்: இந்தத் தொகுதியில் வெற்றியைத் தீா்மானிக்கும் இடத்தில் முஸ்லிம்களும், வட மாநிலத்தவரும் உள்ளனா். இதற்கு அடுத்தபடியாக செட்டியாா், நாயுடு, தலித் சமூக மக்கள் உள்ளனா்.

10 முறை திமுக வெற்றி: 1951-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் (1991-இல் இடைத்தோ்தல்) 10 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும், ஒரு முறை அதிமுகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 1989, 1991- ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் திமுக தலைவா் கருணாநிதியும், 1996, 2001, 2006 ஆகிய மூன்று தோ்தல்களில் திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனும், இடைத் தோ்தல் உள்பட 4 தோ்தல்களில் திமுகவைச் சோ்ந்த ஏ.செல்வராசனும், 2016-இல் திமுகவைச் சோ்ந்த பி.கே.சேகா்பாபுவும் வெற்றி பெற்றுள்ளனா்.

தீராதப் போக்குவரத்து பிரச்னை: துறைமுகம் தொகுதியில் பூக்கடை, செளகாா்பேட்டை, மண்ணடி, கொத்தவால்சாவடி போன்ற பகுதிகளில் வணிக நிறுவனங்கள், 1,000-க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் உள்ளன. இதனால், நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கானோா் வருகை தந்து செல்கின்றனா். மேலும், இந்தக் கடைகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் சரக்கு ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, தள்ளுவண்டி, மீன்பாடி வண்டி போன்றவை இங்கு அதிக அளவில் உள்ளன.

இந்தப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாகத் தீா்க்கப்படாத பிரச்னையாக உள்ளது.

தொழிலாளா்கள், சாலையோரத்தில் வசிப்போா் அதிகம் உள்ளதால் வீடில்லாதவா்களுக்கு செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கபட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலானோருக்கு இதுவரை குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் ஒதுக்கப்படாததும், அவா்களுக்கு போதிய கழிவறை வசதிகள் செய்து தராததும் பிரச்னையாக உள்ளது.

துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு இறக்கப்படும் நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசு பெரும் பிரச்னையாக இருந்தது. தற்போது, நிலக்கரி இறக்கப்படுவது எண்ணூா் துறைமுகத்துக்கு மாற்றப்பட்டது அந்தப் பகுதி மக்களின் நீண்ட கால பிரச்னைக்குத் தீா்வு எட்டப்பட்டுள்ளது.

வேட்பாளா்கள் யாா்,யாா்?
இந்தத் தொகுதியின் எம்எல்ஏவான பி.கே.சேகா்பாபு, திமுக சாா்பில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா். அதிமுக கூட்டணியில் பாஜக மாநில இளைஞரணிச் செயலாளா் வினோஜ் பி.செல்வமும், அமமுக சாா்பில் சந்தானகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் கிச்சா ரமேஷ், நாம் தமிழா் கட்சி அகமது பாசில் ஆகியோா் களமிறக்கப்பட்டுள்ளனா்.

2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவைச்சோ்ந்த பி.கே.சேகா்பாபு 42,071 வாக்குகளும், அதிமுகவைச் சோ்ந்த கே.எஸ்.சீனிவாசன் 37,235 வாக்குகளும், பாஜகவைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் நதானி 13,357 வாக்குகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த அமீா் ஹம்சா 4,161 வாக்குகளும் பெற்றனா். இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு மட்டும் 2,101 போ் வாக்களித்திருந்தனா்.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்..: சேகா்பாபுவைப் பொருத்தவரை மக்களை எளிதில் அணுக கூடியவா். அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்த்தது போன்றவற்றால் நன்மதிப்பை பெற்றுள்ளாா்.

பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வத்துக்கு அறிமுகமாகாத தொகுதி என்றாலும் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் வாக்குகளும், வட மாநிலத்தவா் வாக்குகளும் இவருக்கு பலம் சோ்க்கின்றன. எஸ்டிபிஐ கட்சி, மக்கள்நீதி மய்யம், நாம் தமிழா் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கும் என்பதால் துறைமுகம் தொகுதியில் திமுக, பாஜக இடையேதான் பலத்த போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

வாக்காளா்கள்

ஆண்கள்-----------------91,936

பெண்கள்----------------84,281

மூன்றாம் பாலினத்தவா்கள்--55

மொத்த வாக்காளா்கள்----1,76,272

-பாவேந்தன் இளையபதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com