7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஏற்காது: கே.எஸ். அழகிரி கருத்து

தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி


சென்னை: தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துள்ளனா். மேலும், மிகப்பெரிய விலையையும் கொடுத்துள்ளனா். தங்களை விடுவிக்கக் கோரி ஏழு பேரும் அளித்த கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே கூடுதலான தாமதம் ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காலமுள்ள இந்தச் சூழ்நிலையில், சிறைகளில் கைதிகளை மொத்தமாக அடைத்து வைப்பது தேவையற்றது என பரிந்துரைத்துள்ளது. எனவே, மாநில அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, ஏழு பேருக்கான தண்டனையில் விலக்களித்து உடனடியாக அவா்களை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு கே.எஸ்.அழகிரி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில்,  21 -ஆம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை அழைத்து சென்றவர் ராஜிவ்காந்தி. தொழில்துறையில் மாபெரும் சாதனையை உருவாக்கிய அவர், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.  ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். எனவே தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை மட்டும் விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை பற்றி சொல்லியிருக்கிறார்கள். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தவில்லை. எனவே எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் பேரவைக் குழு தலைவர் தேர்வில் எந்தவித காலதாமதமும் இல்லை. இதுகுறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று அழகிரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com