நீண்ட அனுபவம் கொண்ட துரைமுருகன் இப்படி பேசியிருப்பாரா? 

நீர்வளத்துறையில் நீண்ட அனுபவமும், வல்லமையும் கொண்ட அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசியிருப்பாரா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால்...
துரைமுருகன்
துரைமுருகன்


மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன்பாக அது குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று நீர்வளத்துறையில் நீண்ட அனுபவமும், வல்லமையும் கொண்ட அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசியிருப்பாரா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால், இது பற்றிய செய்திகள் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் வெளியாகியிருப்பதால் துரைமுருகன் அவர்கள் கூறியிருப்பதை உண்மை என்று நம்ப வேண்டியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல் காவிரியில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த அரசுடன் பேச்சு நடத்தப்படும் என தமிழக அரசு கூறுவது வருத்தமளிக்கிறது.

கர்நாடக - தமிழக எல்லைப்பகுதியில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பு காரணமாக மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஆனாலும், தன்னிச்சையாக அணை கட்டும் பணியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு ஆணையிட்டிருக்கிறது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் அவர்கள், மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன்பாக அது குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார். நீர்வளத்துறையில் நீண்ட அனுபவமும், வல்லமையும் கொண்ட அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசியிருப்பாரா? என்ற ஐயம் எழுந்தது. ஆனால், இது பற்றிய செய்திகள் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் வெளியாகியிருப்பதால் துரைமுருகன் அவர்கள் கூறியிருப்பதை உண்மை என்று நம்ப வேண்டியுள்ளது.

மேக்கேதாட்டு அணை குறித்த சிக்கல் கடந்த இரு நாள்களுக்கு முன்பு எழுந்தபோதே அதை தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திட்டவட்டமாக கூறியிருந்தார். அது தான் பாமகவின் நிலைப்பாடும் ஆகும். மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திறம்பட நடத்துவதும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து புதிய அணைக்கு அனுமதி வழங்காமல் தடுப்பதும் தான் இப்போதைக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய பணியாகும். மேக்கேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேசுவதற்கு எதுவும் இல்லை எனும் போது, அந்த அரசுடன் இதுபற்றி பேசுவது அவசியமற்றது.

மேக்கேதாட்டு அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சு நடத்தினால் நமக்கு தான் பாதிப்பு ஏற்படும். 1970-களில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்தியதால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். அக்காலத்தில் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகள் கட்டப்பட்டன; காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவும் குறைந்து விட்டது. இப்போது கர்நாடகத்துடன் பேச்சு நடத்தினால் இந்த சிக்கலில் நாம் நமது உரிமைகளை இழக்க நேரிடும்.

இன்னும் கேட்டால் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழகத்துடன் பேச கர்நாடகம் துடித்துக் கொண்டிருக்கிறது. 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மேக்கேதாட்டு அணை குறித்து தமிழ்நாடு - கர்நாடகா அரசுகளிடையே பேச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதையேற்று இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப் போவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும் உறுதியளித்தார். அப்போதே அதை பாமக கடுமையாக எதிர்த்தது. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடகத்துடன் பேசுவது நமது உரிமைகளை இழக்கவும், சமரசம் செய்து கொள்வதற்கும் மட்டுமே வழிவகுக்கும். எனவே, மேக்கேதாட்டு குறித்து கர்நாடகத்துடன் தமிழக அரசு எந்த நிலையிலும் பேச்சு நடத்தக்கூடாது. மாறாக, மேக்கேதாட்டு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திறம்பட நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com