
திருச்சி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8ம் தேதி தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கேதார்நாத்தில் அமைந்துள்ள ஆதிசங்கரச்சாரியாரின் சமாதி உத்தராகண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதனை புனரமைப்பு செய்து பின்பு இன்று மோடி திறந்து வைத்தார். அதன் நேரடி காட்சிகளும் சிறப்பு பிரார்த்தனைகளும் இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடத்தப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் எல்இடி திரை மூலம் காண, வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி, முல்லைப் பெரியாற்றில் 138.5 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் 136 அடி இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுவாக முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் போது தேனி மாவட்ட ஆட்சியரும் தமிழக அமைச்சரும் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அது ஏன் என தெரியவில்லை. அதற்கான காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு துணை பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அதற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை என்பதால் கேரளத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
முல்லை பெரியாறு அணையிலிருந்து 136 அடி நீர் இருக்கும் போதே அவசர அவசரமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனைக் கண்டித்து நவம்பர் 8 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம்.
இன்று அமைச்சர் துரைமுருகன் அந்த அணையை பார்வையிட சென்றுள்ளார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டில் நூறு நாள் வேலை திட்டத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் நடக்கிறது.
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 246 கோடியே 13 லட்சத்திற்கு ஊழல் நடந்து இருக்கிறது. கடந்த ஆட்சியிலிருந்தே ஊழல் நடந்துள்ளது. அக்டோபர் மாதம் நடந்த கணக்கு தணிக்கையில் இது தெரிய வந்துள்ளது. ஊழல் செய்யப்பட்ட பணத்தில் ஒரு கோடியே 85 லட்சம் தான் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது. விரைவாக அனைத்து பணத்தையும் மீட்க வேண்டும்.
நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கவில்லை. உடனடியாக குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறானது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்.
அதிகம் படித்திருந்தாலே காமன் சென்ஸ் குறைவாக தான் இருக்கும். ப.சிதம்பரம் அதிகம் படித்தவர்.பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு குறித்து இடைத்தேர்தல் முடிவுகளே காரணம் என அவர் கூறி உள்ளார். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 15 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதில் 6 இடத்தில் புதிதாக வெற்றி பெற்றுள்ளோம்.
கோயிலுக்கு வெளியே அமர்ந்து கொண்டு உள்ளே போய் சாமி கும்பிடுங்கள் என கூறுபவர்கள் போல் தான் காங்கிரஸ் கட்சியின் நிலையாக உள்ளது. இது குறித்தெல்லாம் சிதம்பரம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமக தமிழகம் மாறி வருகிறது. இதற்கு நிதி அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். நிதி நிலைமை மோசமாக உள்ளது. தமிழக முதலமைச்சர் இதை கவனிப்பார் என நம்புகிறோம் என கூறினார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.