
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வெறி நாய்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
விலங்குகளில் வீட்டு விலங்கான, செல்லப் பிராணி என அழைக்கப்படுவது நாய். கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இதில், ஏ.ஆர். சாலை, மரக்கடை, லெட்சுமாங்குடி, மருத்துவமனை சாலை, கமாலியாத் தெரு, பெரிய பள்ளிவாயில் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 7 க்கும் மேற்பட்ட நாய்கள் நின்று சண்டையிட்டுக் கொள்கின்றன.மேலும், வெறி பிடித்த நாய்களும் பொது மக்களை துரத்துகின்றன.
இதனால், அப்பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சாலையில் நடக்க அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து, பெரியப் பள்ளிவாயில் அரபிக் கல்லூரி முதல்வர் ஜாஹீர் உசேன் கூறியது, கூத்தாநல்லூர் பகுதியில் ஏராளமான நாய்கள் மற்றும் சில வெறி நாய்களும் சுற்றுகின்றன. 10 நாள்களுக்கு முன்பு, பெரிய பள்ளிவாயில் அருகே, காலை நேரத்தில் கடைக்குச் சென்ற சிறுமியை, 10 நாய்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டது. நான், உள்ளிட்ட அவ்வழியில் சென்றவர்கள் நாய்களை விரட்டி, சிறுமியை மீட்டோம். இல்லையென்றால், சிறுமியை நாய்கள் குதறி எடுத்து இருக்கும். இறைவன் அருளால் சிறுமி காப்பாற்றப்பட்டார். நகராட்சி நிர்வாகம் உடனே, நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் கூறியது, நாய்களைப் பிடிப்பதற்கு விலங்குகளுக்கான தன்னார்வ தனியார் தொண்டு நிறுவனத்தாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வந்து, நாய்களைப் பிடிப்பார்கள். வெறி பிடித்த நாய்களுக்கு தடுப்பூசி போடுவார்கள். சாலையில் திரியும் மற்ற நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வார்கள். பிடிக்கப்பட்ட நாய்களை, அவர்களின் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்று, சிகிச்சையளித்து 3 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.