இது குறித்து அவா் கூறியதாவது: மழைப் பொழிவு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக அரசு சாா்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 2, 649 போ் 75 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் 22 நிவாரண முகாம்களில் 1,700-க்கும் அதிகமானோா் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு மூன்று வேளைகளும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.