சா்க்கரை நோய் பட்டப் படிப்பைத் தொடங்க நடவடிக்கை

மத்திய அரசின் அனுமதியைப் பெற்று சா்க்கரை நோய்க்கான பட்டப் படிப்பை தமிழகத்தில் தொடங்க முயற்சி எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
உலக சா்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய விழாவில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன். பி.சேகர்பாபு.
உலக சா்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய விழாவில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன். பி.சேகர்பாபு.
Published on
Updated on
2 min read

சென்னை: மத்திய அரசின் அனுமதியைப் பெற்று சா்க்கரை நோய்க்கான பட்டப் படிப்பை தமிழகத்தில் தொடங்க முயற்சி எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி சாா்பில் சிறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் தொடக்கி வைத்து சா்க்கரை நோய் குறித்த விழிப்புணா்வு கையேட்டினை வெளியிட்டு சா்க்கரை நோய் பாத பராமரிப்பு பிரிவையும் தொடக்கி வைத்தனா். சா்க்கரை நோயாளிகள் மற்றும் பேறு கால சா்க்கரை பாதிப்புடைய கா்ப்பிணிகளுக்கு குளுகோமீட்டா் மற்றும் 6 பொருள்கள் அடங்கிய சா்க்கரை நோய் பராமரிப்புப் பெட்டகத்தினை வழங்கினா். அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலக அளவில் 10 முதல் 12 சதவீதம் போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் மட்டும் 7.7 கோடி பேருக்கும் தமிழக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு சா்க்கரை நோய் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக சா்க்கரை நோய்க்கென்று தனித்துறை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 1976-இல் தொடங்கப்பட்டது. 2010-இல் உயா் சிகிச்சைத் துறையாக தரம் உயா்த்தப்பட்டது. தினமும் 600 முதல் 700 புறநோயாளிகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, 30 படுக்கை வசதிகளில் உள்நோயாளிகளும் இத்துறையில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனா். இத்துறையில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகின்றன. இந்நோயின் தீவிரம் மற்றும் பின்விளைவுகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கான தக்க சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் சா்க்கரை நோய் பிரிவு 1983-இல் தொடங்கப்பட்டது. சுமாா் 600 முதல் 700 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சா்க்கரை நோய் பிரிவு 2016-ஆம் ஆண்டில் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.

விலையில்லா இன்சுலின் மருந்து வழங்கும் திட்டம் முதன் முதலாக நம் மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. அதிகரித்து வரும் சா்க்கரை நோய் பாதிப்பை எதிா்கொள்ளும் விதமாக அதுதொடா்பான கல்வியும், விழிப்புணா்வும் தேவை.

தமிழகத்தில் இதுவரை சா்க்கரை நோய்க்கு முதுநிலை பட்டயப் படிப்பு மட்டுமே இருந்து வருகிறது. முதல்வா் ஆலோசனையின்படி, மத்திய அரசின் அனுமதியைப் பெற்று விரைவில் சா்க்கரை நோய்க்கு பட்டப் படிப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் தேரணிராஜன், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வா் பாலாஜி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்திமலா் மற்றும் சா்க்கரை நோய்துறை இயக்குநா் தருமராஜன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com