நிரம்பியது கரியக்கோயில் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை‌, 9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு  இரண்டாவது முறையாக நிரம்பியது. உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள
கடல்போல் காட்சியளிக்கும் கரியக்கோயில் அணை
கடல்போல் காட்சியளிக்கும் கரியக்கோயில் அணை
Published on
Updated on
2 min read


வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை‌, 9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர்  விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. 

9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு இரண்டாவது முறையாக நிரம்பிய கரியக்கோயில் அணை.

ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஏறக்குறைய 2000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன.

சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாததால், கடந்த 9 ஆண்டுகள் முழு கொள்ளவையும் எட்டவில்லை. கடந்த 2012 ஜனவரி 15 ஆம் தேதி அணை இறுதியாக நிரம்பியது.

9 ஆண்டுக்கு பின் நிகழாண்டு ஜனவரி 15 ஆம் தேதி  52 அடியை தொட்டது.  அணையில் மொத்த கொள்ளளவான  190 மில்லியன் கன அடியில், 182 மி.கன அடி தண்ணீர் தேங்கியது.  

இதனையடுத்து அணையில் இருந்து உபரி நீர் கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டது. 

அணையில் இருந்து தண்ணீர் சுழற்சி முறையில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால், ஏப்ரல் மாதத்தில் அணையின் நீர்மட்டம் அடியோடு குறைந்து போனது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பருவ மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில், 51.85 அடியாக  உயர்ந்து, அணையில் 178.02 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. 

அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் வினாடிக்கு 108 கன அடி தண்ணீரும், அணையின் பிரதான மதகு வழியாக கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.  இந்த உபரி நீர் வெள்ளிக்கிழமை காலை வசிஷ்ட நதி வந்தடைந்தது.

9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு கரியக்கோயில் அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால், கரியக்கோயில் அணை பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com