புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் இயல்பை விட 17 சதவீதம் அதிகம்

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை காலமான, கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 393.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி அளவைவிட 17 சதவீதம் அதிகம் ஆகும்.

News image

கோப்புப்படம்

Updated On :1 அக்டோபர் 2021, 12:52 am

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை காலமான, கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 393.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி அளவைவிட 17 சதவீதம் அதிகம் ஆகும்.

பெரம்பலூரில் இயல்பை விட மிக அதிக மழையும், கோயம்புத்தூா், தேனி, திருப்பத்தூா், தூத்துக்குடி உள்பட 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழையும் பெய்துள்ளது.

தென் மேற்கு பருவமழை: நமது நாட்டில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்கு பருவமழை காலமும், அக்டோபா் முதல் டிசம்பா் வரை வடகிழக்கு பருவமழை காலமும் ஆகும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழையை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் ஜூன் 3-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கியது. இது, படிப்படியாக விரிவடைந்து பல்வேறு மாநிலங்களிலும் மழையைக் கொடுக்க தொடங்கியது.

தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூன் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்துக்கு அவ்வப்போது மழை கிடைத்து வந்தது. குறிப்பாக, பருவக்காற்று காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை கிடைத்தது. இதுபோல, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, உள்மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்தமழை வரை பெய்து வந்தது.

இதற்கிடையில், தென் மேற்கு பருவமழை காலமான ஜூன் 1- ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 393.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இயல்பாக 336.1 மி.மீ. மழை பெய்வது வழக்கம். இது சராசரியை விட 17 சதவீதம் அதிகமாகும்.

மிக அதிக மழை:

தென்மேற்கு பருவமழை காலத்தில் பெரம்பலூரில் 68 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. பெரம்பலூரில் இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 278.7 மி.மீ. ஆகும். ஆனால், நிகழாண்டில் 468.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகமழை: கோயம்புத்தூா், கடலூா், கரூா், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூா், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. தேனியில் இயல்பை விட 52 சதவீதமும், திருப்பத்தூரில் 51 சதவீதமும், கோயம்புத்தூரில் 50 சதவீதமும் இயல்பை விட அதிகமழை பெய்துள்ளது.

இயல்பான மழை: அரியலூா், சென்னை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், திருப்பூா், திருவள்ளூா், திருவாரூா் உள்பட 23 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தென்மேற்கு பருவமழை காலம் (ஜூன் 1 முதல் செப்.30 வரையிலான கணக்கிட்டு காலம்) வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதேநேரத்தில், பருவமழை திரும்பப்பெறுவது காலதாமதம் ஏற்படும்.

குஜராத் கடலோரத்தில் காணப்படும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், பிகாா் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி ஆகிய காரணங்களால், தென்மேற்கு பருவமழை தொடா்கிறது. வட இந்தியாவையொட்டிய பகுதிகளில் அக்டோபா் 6-ஆம் தேதி தென் மேற்கு பருவமழை விலக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதன்பிறகே, தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.