வாய்க்கால் காணவில்லை, வெட்டியதற்கு ரசீது உள்ளது: கிராமசபைக் கூட்டத்தில் வடிவேல் காமெடி போல் ருசிகரம்!

1971 இல் வெட்டிய வாய்க்கால் காணவில்லை, வெட்டியதற்கு ரசீது உள்ளது, வாய்க்காலுக்கு வரி கட்டுகிறோம் என விவசாயி புகார் மனு அளித்திருப்பது நடிகர்  வடிவேல் காமெடி போல் உள்ளது.
ஐங்கமசமுத்திரம் கிராம சபையில் வாய்க்காலை காணோம் என்று புகார் மனு தரும் விவசாயி அண்ணன் பெரியசாமி  உள்ளிட்டோர் .
ஐங்கமசமுத்திரம் கிராம சபையில் வாய்க்காலை காணோம் என்று புகார் மனு தரும் விவசாயி அண்ணன் பெரியசாமி உள்ளிட்டோர் .

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் கிராமசபைக் கூட்டத்தில், 1971 இல் வெட்டிய வாய்க்கால் காணவில்லை, வெட்டியதற்கு ரசீது உள்ளது, வாய்க்காலுக்கு வரி கட்டுகிறோம் என விவசாயி புகார் மனு அளித்திருப்பது நடிகர்  வடிவேல் காமெடி போல் உள்ளது என ருசிகரமாக மக்கள் பேசிக் கொண்டனர். 

தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்கான கிராம சபைக் கூட்டம், செங்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சித் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கெங்கவல்லி ஒன்றிய மேற்பார்வை பொறியாளர் ராம்குமார், தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர் இராஜலிங்கம், ஆசிரியர் பயிற்றுநர் சுப்ரமணியன், வாழக்கோம்பை விஏஒ செல்லையன், வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளி,செங்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் கோபால் வரவேற்றார். 

இதில்,  ஊராட்சியில் பண்ணைக்குட்டை திட்டப்பணிகள் உள்ளிட்ட பிற நலத்திட்டப்பணிகள், கரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்வேண்டும், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மாணவர்களது வீடுகளுக்குச் சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளித்திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக கூறப்பட்டது. 

மேலும் உலர்களம் ஆக்ரமிப்பு குறித்து சந்திரன் புகார் தெரிவித்தார். பெண்கள் சிலர் தங்கள் பகுதியில் அடி கைப்பம்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து வலியுறுத்திப் பேசினர். 

கிராமசபைக் கூட்டத்தில் செங்காடு கிராமத்தினைச் சேர்ந்த விவசாயி அண்ணன்பெரியசாமி அளித்த மனு.

வாழக்கோம்பை பள்ளிக்கட்டிட பராமரிப்பு குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து செங்காடு கிராமத்தினைச் சேர்ந்த விவசாயி அண்ணன்பெரியசாமி என்பவர், கிராம சபைக்கூட்டத்தில் பேசியதாவது, செங்காடு கிராம விவசாய நிலங்களுக்கு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பெரப்பன்சோலை அணைக்கட்டிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலம் ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, செங்காடு கிராமத்தில் உள்ள 54.06 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் வெட்டிபாசன வசதிசெய்து தர 1971 -1972 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு 1984 ஆம் ஆண்டு முதல் நீர்ப்பாசன மேம்பாட்டு வரி அனைத்தும் அரசாணையிட்டு (அரசாணை நாள் 21.3.1984)வருவாய்த்துறை மூலம் வசூல் செய்து வருகின்றனர். அதற்கான ரசீது உள்ளது. ஆனால் இதுநாள் வரை வாய்க்கால் வெட்டப்படவில்லை. எனவே, செங்காடு கிராமத்தில் வெட்டாத வாய்க்காலுக்குரிய வரிகளை விவசாயிகள் தற்போது செலுத்தி வருகின்றனர். ஆனால் வாய்க்காலை காணவில்லை. 

எனவே, செங்காடு கிராம விவசாய நிலங்கள் 54.06 ஏக்கருக்குரிய வாய்க்காலை வெட்டி,பாசன வசதி செய்து தரவேண்டும் என பேசி, கோரிக்கை மனுவை, ஊராட்சித்தலைவர் பெரியசாமியிடம் வழங்கினார்.  

நடிகர் வடிவேல் திரைப்படம் ஒன்றில் கிணற்றைக் காணோம், கிணறு வெட்டிய ரசீது இருக்கு என்று காமெடியாய் கூறுவது போல், வாய்க்காலை காணோம் என்று உள்ளதாக கூட்டத்தில் மக்கள் பேசிக் கொண்டனர். இதற்கு ஊராட்சித்தலைவர் பெரியசாமி, இதுகுறித்து மேலதிகாரிகளிடம் பேசுவதாக கூறி உறுதியளித்தார். இறுதியாக ஊராட்சி துணைத்தலைவர் சங்கீதாஅழகப்பன் நன்றி கூறினார்.

ஐங்கம சமுத்திரம் கிராம சபையில் வாய்க்காலை காணோம் என்று புகார் மனு தரும் விவசாயி அண்ணன் பெரியசாமி  உள்ளிட்டோர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com