கோப்புப்படம்
கோப்புப்படம்

சாத்தான்குளம் அருகே கால்,கைகள் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி மரணம்: போலீசார் விசாரணை

சாத்தான்குளம் அருகே குடிபோதையில் கணவன் மனைவியிடம் தகராறு செய்ததில், அவரது கைகளை கட்டி அருகில் உள்ள வேப்பமரத்தில் கட்டி போட்டுள்ளனர். அதில் அவர் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென இறந்து போனார்.
Published on


சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே குடிபோதையில் கணவன் மனைவியிடம் தகராறு செய்ததில், அவரது கைகளை கட்டி அருகில் உள்ள வேப்பமரத்தில் கட்டி போட்டுள்ளனர். அதில் அவர் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென இறந்து போனார்.

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு நரையன் குடியிருப்பையைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் ஜெயக்குமார்( 55) இவரது மனைவி கலா(50). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

கூலி தொழில் செய்துவந்த ஜெயக்குமார் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அடிக்கடி ஊருக்கு வந்து மனைவி குழந்தைகளை பார்த்து செல்வது வழக்கம். வரும்போதெல்லாம் மது போதையில் வந்து  மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்தநாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சனிக்கிழமை ஊருக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்ததால் மனைவி வீட்டில் அனுமதிக்கவில்லை. இதனால் மனைவி, குழந்தையுடன் தகராறில் ஈடுபட்டார். 

இதையடுத்து அவர் மனைவி தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து அவரை சமாதானபடுத்தி போலீசார் அவரை ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். ஆனால் ஊருக்கு செல்லாமல் மீண்டும் வந்து தகராறு செய்ததால் மனைவி அவரது கை, கால்களை கட்டி அருகில் வீட்டு முன்பு இருந்த வேப்ப மரத்தில் கட்டி போட்டார். பின்னர் தூங்க சென்று விட்டனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை கணவரை பார்த்த போது, கீழே விழுந்ததில் தலையில் காயத்துடன் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து மனைவி கலா தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தட்டார்மடம் ஆய்வாளர் (பொறுப்பு) பிச்சை பாண்டியன் தலைமையில் ஆய்வாளர்கள் முரளிதரன், நெல்சன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து மனைவி கலா மற்றும் அவர் மகள் ஒருவரை அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இது சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரத்தில் கட்டி போட்டதில் கீழே விழுந்ததில் மூச்சு திணறி அவர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com