
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சாலைகள் சேதமடைந்தன.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது காலநிலை மாறி பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சாரலாக தொடங்கிய மழை அதன்பின்னர் வலுவடைந்து பலத்த மழையாக மாறியது. நேரம் செல்லச்செல்ல பலத்த மழை கன மழையாக மாறி விடாமல் பெய்து கொண்டே இருந்தது. நள்ளிரவு வரை நீடித்த இந்த கனமழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. வறண்டு கிடந்த கண்மாய், ஊரணி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அதிக அளவில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்தால் இடிந்து சாய்ந்தது. அதிஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் மழையால் சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டன.
வானம் பார்த்த பூமியான இளையான்குடி ஒன்றியத்தில் விதைப்பு முறையில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கும் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் நடவு முறையில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கும் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவாக திருப்புவனத்தில் 82 மி. மீ மழையும் மானாமதுரையில் 65 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. சில நாள்களாக மேற்கண்ட பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.