அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கேள்வி

கூடங்குளம் அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கேள்வி
Published on
Updated on
2 min read

கூடங்குளம் அணுக் கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்ற 23.07.2021 அன்று, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் கிடங்கு ஒன்றினை  அணுஉலைக்கு வெளியே அமைப்பதற்கு தேவையான அனுமதி இசைவை அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இந்திய அனுசக்தி கழகத்திற்கு வழங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு தெரிவித்துள்ள தகவல் படி, இந்த பயன்படுத்தப்பட்ட கழிவுக்கிடங்கு  128  கழிவுகளை உள்ளடக்கிய உறைகளையும் 4328 கழிவுத் தொகுப்புகளையும் வைக்க தேவையான கொள்ளளவு கொண்டது. இதன் வாழ்நாள் காலம் 75 ஆண்டுகள். இத்திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாக அணுஉலை கழிவுகளை சேமிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும் அங்கே இத்தகைய கிடங்கை ஏற்படுத்தும் திட்டத்துக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இசைவு அளித்திருப்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும்.

முதல் இரண்டு அலகுகளின் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருள் கழிவுகள் ரஷியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கே தங்கள் கவனத்திற்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதனால்தான் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கூடங்குளம் வளாகத்தில் உலைக் கழிவு கிடங்கு பரிசீலிக்கப் படவில்லை. ஆனால், ரஷியாவில் ஏற்கனவே அவர்களது அணுக் கழிவுகள் பிரச்னைகள் கடுமையான நிலையில் கூடங்குளம் கழிவுகளை ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்த சேமிப்பு கிடங்கு இங்கேயே அமைக்கப் படுகிறது. ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமா மற்றும் ரஷியாவின் செர்னோபில் அணு விபத்துக்குகளுக்கு பிறகு உலகின் மூன்றாவது பெரிய விபத்து ரஷ்யாவின் மாயக்  பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், கூடங்குளம் அணு உலை கழிவுகள் கிடங்கு தொடர்பான வழக்கில் இதுபோன்ற ரஷியத் தொழில்நுட்ப வகை அழுத்தம் ஊட்டப்படட கனநீர அணுஉலை எரிபொருள் சார்ந்த அணுமின் நிலையங்களில், நெடுங்கால உலைக்கழிவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்கு வசதிகள் விஷயத்தில் இந்தியாவுக்கு முன்அனுபவம் ஏதும் இல்லை என்று  இந்திய அணுசக்தி கழகம் 6.12.2017 அன்று சமர்ப்பித்த தனது பதில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

எனவே, இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி முதல் இரண்டு அலகுகளின் கழிவுகளை ரஷியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற்றிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட  அனைத்து அணுமின் நிலையங்களின் பயன்பாடு முடிந்த அணுஉலை எரிபொருள் கழிவுகளை பத்திரமாக பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப் பட வேண்டும். இந்த நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு ஒரு தேசிய முன்னுரிமை திட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்படவேண்டும். சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் கடும் காலவிரயம் ஆகிவிட்டதை உணர்ந்து பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com