திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. 
திருப்புவனம் ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சின்னையா
திருப்புவனம் ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சின்னையா


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. 

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும் காங்கிரஸ் இரு இடங்களிலும்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும், அதிமுக அணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

அதன் பின்னர் அரசியல் நடவடிக்கை காரணமாக ஒன்றியத் தலைவர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற சின்னையா திமுகவில் இணைந்து தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சின்னையா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தலைவர் தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தலைவராக தேர்வு செய்யப்பட்ட சின்னையாவிற்கு திருப்புவனத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றியச் செயலாளர் வசந்தி சேங்கைமாரன், இளையான்குடி திமுக ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன் உள்ளிட்ட கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது சின்னையா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியைக் கைப்பற்றினார். 

தற்போது தலைவர் தேர்தலில் திமுகவில் இணைந்து திமுக வேட்பாளராக போட்டியிட்டு தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com