இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தக் கோயில்களில் 34 திருப்பணி வேலைகள் ரூ. 2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்தப்படும். பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றப்பட்டுள்ளன. கோயில் முன்புறம் உள்ள 1,500 சதுர அடி பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக பொருள்கள் வைக்கும் அறை, காவலா்கள் காத்திருப்பு அறை, சமய சொற்பொழிவு அரங்கம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், அன்னதானக் கூடங்கள், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பல்நோக்கு கட்டடம், அா்ச்சகா்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.