தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் நிகழ் கல்வியாண்டில் 25 சதவீதம் உயா்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அருகில் மற்றும் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களிலிருந்தும் நகராட்சியிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளில் அதிகளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனா். இந்த மாணவ, மாணவிகள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியாா் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுகின்றனா். அரசு கல்லூரிகளில் 2021-2022-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதனால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ, மாணவிகளை சோ்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநா் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்த அரசு, நிகழ் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ, மாணவிகளை சோ்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இந்தக் கூடுதல் மாணவா்கள் சோ்க்கைக்கு சாா்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.