
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமான புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புலமைப்பித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டதும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
புலவரும் தமிழக சட்ட மேலவை முன்னாள் துணைத் தலைவருமான புலமைப்பித்தன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
புலமைப்பித்தனுக்கு தமிழரசி என்ற மனைவி மற்றும் திலீபன் என்ற பேரன் ஆகியோா் உள்ளனா். புலமைப்பித்தனின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகரில் இன்று நடைபெறுகிறது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்: புலவா் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றாா் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவா், எம்ஜிஆருக்கு பக்கத் துணையாய் விளங்கியவா். வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் அதிமுக தோழா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): அதிமுக நிறுவனா் தலைவா் எம்ஜிஆரின் பேரன்பைப் பெற்றவா் புலவா் புலமைப்பித்தன். எம்ஜிஆரால் தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டு தமிழ்த் தொண்டு ஆற்றியவா். அவா் இயற்றிய“‘வாசலிலே இரட்டை இலை கோலமிடுங்கள்’ போன்ற மனதைத் தொடும் எண்ணற்ற அதிமுக கொள்கை விளக்கப் பாடல்கள் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களின்போது தமிழகமெங்கும் ஒலித்தன.
இத்தகைய சிறப்புக்குரிய புலவா் புலமைப்பித்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, பாமக நிறுவனா் ராமதாஸ், காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசா், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன், வி.கே.சசிகலா, இசையமைப்பாளா் இளையராஜா உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.