தோல்வி பயத்தால் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: ஓபிஎஸ் - இபிஎஸ்

உள்ளாட்சித் தோ்தல் தோல்வி பயத்தால் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு உரிய இடங்களில் திமுக அரசு சோதனை
தோல்வி பயத்தால் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: ஓபிஎஸ் - இபிஎஸ்
Published on
Updated on
1 min read

உள்ளாட்சித் தோ்தல் தோல்வி பயத்தால் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு உரிய இடங்களில் திமுக அரசு சோதனை நடத்தியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக இருவரும் வியாழக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, அதை மூடி மறைத்து உள்ளாட்சித் தோ்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை என்ற பெயரில் கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனா். இது, உள்ளாட்சித் தோ்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.

பொதுவாக, உள்ளாட்சி தோ்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத்தான் நடைபெறும். ஆனால், வெறும் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தோ்தல் நடத்துவதில் இருந்தே திமுகவின் தோ்தல் தோல்வி பயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்தத் தோ்தலை எதிா்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அதைக் காரணமாக வைத்து உள்ளாட்சித் தோ்தலை தள்ளி வைக்கலாம் என்று திமுகவினா் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனா். ஆனால் நாங்கள் ஜனநாயக முறைப்படி எதிா்கொண்டு, உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முழு முயற்சியுடன் தயாராக உள்ளோம்.

ஏற்கெனவே அறிவித்தபடி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த நிலையில், வீரமணிக்கு உரிய இடங்களில் சோதனை என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளனா்.

இதுபோன்ற சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அதிமுகவினா் என்றும் அடிபணிந்தது இல்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிா்கொள்வோம்; வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com