கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரோனா நோய்த் தொற்றால் இறந்து போனவர் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் (23.09.2021) ஒன்றிய அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் நிவாரண நிதியாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்துடன் கரோனா உயிரிழப்புக்கான வரையறைகளையும் தெரிவித்துள்ளது.
முன்னர் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி மூலம் மாநிலங்களின் நிதி வருவாயை பெருமளவு ஒன்றிய அரசு வசப்படுத்தி, மடைமாற்றம் செய்து கொண்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட நிதி இழப்பை, மத்திய அரசு ஈடு செய்யும் என கொடுத்த உறுதிமொழி மதிக்கப்படவில்லை.
கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா நோய்த்தொற்றுப் பரவல், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளை மாநில அரசுகள் தனது சொந்த நிதியாதாரத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் வகையில் தமிழ்நாடு அரசு பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது. முந்தைய அரசு குடும்பத்திற்கு தலா ரூ ஆயிரம் ரொக்கப் பண உதவி செய்திருந்த நிலையில், திமுகழகத்தின் புதிய அரசு அமைந்தவுடன் குடும்பங்களுக்கு தலா ரூ 4000 வீதம், இரு தவணைகளில் ரொக்கப் பண உதவியும், 14 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.