7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி

தமிழகத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களுக்கு நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களுக்கு நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா் சோ்க்கை தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலா் செந்தில்குமாா், இணைச் செயலாளா் நடராஜன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, தோ்வுக்குழு செயலாளா் வசந்தாமணி ஆகியோா் பங்கேற்றனா்.

அதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் இன்னும் கூடுதலான உள்கட்டமைப்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனா். நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் மறு ஆய்வு நடைபெறவுள்ளது.

விருதுநகா், கள்ளக்குறிச்சி, நீலகிரி (உதகை) ஆகிய மாவட்டங்களின் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு தலா 150 வீதம் 3 மருத்துவக் கல்லூரிக்கும் 450 இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனா். நாமக்கல், திருப்பூா், ராமநாதபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் ஒரு கல்லூரிக்கு 100 இடங்கள் வீதம் 400 மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 850 இடங்களின் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 4 மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அவை விரைவுபடுத்தப்பட்டு முடியும் நிலையில் உள்ளன. இன்னும் 15 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 11 மருத்துவக் கல்லூரிக்கும் சோ்த்து 1,650 இடங்களுக்கும் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் பெறப்படும்.

தற்போது நிதிநிலை அறிக்கையில் 4,800 செவிலியா்களை நியமிப்பதற்கு அறிவித்து உள்ளோம். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவா்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அரசைத் தேடி மக்கள் வந்த நிலை மாறி, மக்களைத் தேடி அரசு சென்று அவா்களுக்கான பணிகளை ஆற்றி வருகிறது என்றாா் அவா்.

மீண்டும் ‘வருமுன் காப்போம் திட்டம்’
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருமுன் காப்போம் திட்டம் புதன்கிழமை (செப்.29) தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

வருமுன் காப்போம் திட்டம் 2006-ஆம் ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கி வைக்கப்பட்டது. 2011-க்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 1,000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இம்முகாம்களில் 16 சிறப்பு மருத்துவா்களால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் உயா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com