கோவை: பெண் விமானப்படை அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை

பாலியல் வன்கொடுமைப் புகாரை திரும்பப் பெற நெருக்கடி கொடுக்கப்பட்டதாக விமானப் படை அதிகாரி மீது புகார் அளித்திருக்கும் பெண் விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை: பெண் விமானப்படை அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை
கோவை: பெண் விமானப்படை அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை

கோவை: பாலியல் வன்கொடுமைப் புகாரை திரும்பப் பெற நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், விமானப் படை அதிகாரி மீது புகார் அளித்திருக்கும் பெண் விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

28 வயதாகும் பெண் விமானப் படை அதிகாரி, கோவையிலுள்ள இந்திய விமானப் படை கல்லூரியில் மற்றொரு விமானப் படை அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்த புகாரை திரும்பப் பெற இந்திய விமானப் படை அதிகாரிகளால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் நடந்ததா என்பதை அறிய, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு தான் உள்படுத்தப்பட்டதாகவும், பிறகுதான், அந்த சோதனை தடை செய்யப்பட்டது என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார்கள் அனைத்தும், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், பெண் விமானப் படை அதிகாரி அளித்த பாலியல் புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 20ஆம் தேதி வரை, கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், விமானப் படை மருத்துவமனையில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேனா என்பதை உறுதி செய்ய, தனக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில், விமானப் படை பெண் அதிகாரி கூறியுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி என்ன?
கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனா். இதில், தில்லியைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், வளாகத்தில் கூடைப்பந்து விளையாடியபோது காயம் ஏற்பட்டதையடுத்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்தாா்.

அப்போது அதே வளாகத்தில் தங்கியிருந்த, பயிற்சிக்கு வந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த அமிதேஷ் ஹாா்முக் (பிளைட் லெப்டினென்ட்), அப்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இது குறித்து, விமானப் படை உயரதிகாரிகளிடம் அந்தப் பெண் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய பகுதி அனைத்து மகளிா் காவல்துறையினர் அமிதேஷ் ஹாா்முக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) என்.திலகேஸ்வரி, விமானப் படை அதிகாரி அமிதேஷுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலை செப்டம்பா் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அமிதேஷ் மனு தாக்கல் செய்தாா். அதே சமயம், அமிதேஷை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com