வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணாகும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இயக்கம் செய்யாமல் தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகிறது.
நன்னிலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.
நன்னிலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இயக்கம் செய்யாமல் தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில், விவசாயிகள் அறுவடை செய்த நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நெல் வரத்து இல்லை என்ற காரணத்தினால், ஒரு சில கொள்முதல் நிலையங்களைத் தவிர, நன்னிலம் வட்டத்தில்  மாப்பிள்ளைக்குப்பம், மேனாங்குடி போன்ற 12  கொள்முதல் நிலையங்களும்,  குடவாசல் வட்டத்தில் மஞ்சக்குடி, வயலூர், விஷ்ணுபுரம் போன்ற 23 கொள்முதல் நிலையங்களும் மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல்  மூடப்பட்டது. 

இந்நிலையில்  மூடப்பட்ட கொள்முதல் நிலையங்கள் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாமலும், வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமலும், மாதக்கணக்கில், கொள்முதல் நிலையத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி, வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திறந்தவெளியில் அடுக்கப்பட்ட மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போல அரசின் வானிலை மையம், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனையக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

மிகுந்த கவனத்துடன் சாகுபடி செய்து, அறுவடை செய்த நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைவதையும் பார்த்து மிகுந்த வேதனை அடைவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் நிலையப் பணியாளர்களிடம் ஏன் இன்னும் இயக்கம் செய்யவில்லை எனக் கேட்டபோது, மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி வராத காரணத்தினால் இயக்கம் செய்யப்படாமல் தேங்கி உள்ளது என தெரிவித்தனர். 

மேலும் நெல் மூட்டைகளுக்கு, வெயிலாலும், மழையினாலும்  சேதம் ஏற்பட்டால் அந்த சேதத்தைக் கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஈடு கட்ட வேண்டிய நிலையில் உள்ளதால், மிகப்பெரிய பாதிப்பைக் கொள்முதல் நிலைய ஊழியர்கள் சந்திக்க நேரிடும் என கவலையுடன் தெரிவித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுத் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை, விரைந்து இயக்கம் செய்திட வேண்டுமென பரிதாபத்துடன் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com