நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
நடிகர் விவேக்
நடிகர் விவேக்

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த நடிகர் விவேக், 1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 1986-92 வரை தலைமைச் செயலக ஊழியராகவும் பணியாற்றினார். 

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர். அதனால் 'சின்ன கலைவாணர்' என்ற பெயரையும் அவர் பெற்றார். நான்தான் பாலா, வெள்ளைப்பூக்கள் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக். இதுவரை 220-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர். சிறந்த நகைச்சுவை நடிகருக்காக 5 முறை மாநில அரசின் விருதைப் பெற்றவர்.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்களுடன் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகர் விவேக். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று  கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு  கோடிக்கும்  அதிகமான மரக்கன்றுகளை  நட்டு சமூகப் பணியாற்றி வந்தார். தமிழக அரசின் 'பிளாஸ்டிக் இல்லா தமிழகம்', கரோனா பாதுகாப்பு' போன்ற விழிப்புணர்வு குறும்படங்களிலும் ஆர்வமுடன் முன்வந்து நடித்தார்.

2020-ம் ஆண்டு தாராளப் பிரபு படத்தில் இறுதியாக நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தமாகியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com