ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்


புது தில்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்துக் கட்சியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் இந்த 5 நிபுணர்களை தேர்வு செய்யும். 

இந்த குழுவுடன் மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதாவது, உள்ளூர் மக்கள் அடங்கிய மேற்பார்வை குழு ஒன்றை அமைக்கவும், அவர்களை நிபுணர்கள் குழு தேர்வு செய்யவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை மத்திய அரசுக்குத்தான் தர வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் விநியோகத்தில், தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு மீது இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே தலைமையிலான நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த வியாழக்கிழமை வேதாந்தா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே ஆஜராகி, ‘கரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அவரசத் தேவையாக இருந்து வருகிறது. மக்கள் தினந்தோறும் இறந்து கொண்டிருப்பதால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எங்கள் நிறுவனம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால், ஐந்து முதல் ஆறு நாள்களில் உற்பத்தியைத் தொடங்கி விடலாம். தினமும் ஆலையில் டன் கணக்கில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். இவற்றை இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளது. இதனால், இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் எதிா்ப்புத் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில், ‘இந்த மனுவை உடனடியாக விசாரிக்கக் கூடாது. எங்கள் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் விதிகளை உரிய வகையில் பின்பற்றாமல் இருந்ததற்கு பல ஆவணங்கள் உள்ளன. மேலும், இந்த நிறுவனத்தால் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க 2 முதல் 4 வாரங்களுக்கு மேல் ஆகும்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இதையெல்லாம் நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆலை மூலம் அனைத்து சுற்றுச்சூழல் விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம். ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி வசதி செயல்பட அனுமதிக்கப்படும். ஏறக்குறைய ஒரு தேசிய அவசரநிலை உள்ளது. இதனால், இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) விசாரிப்போம்’ என்று தெரிவித்தது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நாட்டிற்கு ஆக்ஸிஜன் மிகத் தேவையாக உள்ளது. எந்த ஆதாரத்தில் இருந்தாவது ஆக்ஸிஜனை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. வேதாந்தா நிறுவனம் தனது ஆலையைச் செயல்பட வைக்க விரும்புகிறது. ஆனால், மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே அந்த நிறுவனம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யட்டும். சுற்றுச்சூழல் - மனித உயிா் பாதுகாப்பதற்கு இடையில் மனித உயிரைப் பாதுகாக்க நாம் ஆதரவாக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களின் உயிா்காக்கும் பொருட்டு ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டொ்லைட் ஆலையை திறக்கலாம் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த பிரமாணப் பத்திரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னணி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனு ஆகஸ்டில் பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com