கூலி வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள்

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டறைகள், பேக்ரிகடைகள், நூற்பாலைகள் போன்றவற்றில் தினக்கூலிகளாக வேலைபார்த்து வருகின்றனர். 
எடப்பாடி புறவழிச்சாலைப்பகுதியில் இயங்கிடும் பேக்ரிகடையில், பணிபுரியும் பள்ளி மாணவன்
எடப்பாடி புறவழிச்சாலைப்பகுதியில் இயங்கிடும் பேக்ரிகடையில், பணிபுரியும் பள்ளி மாணவன்

கரோனா நோய்த்தொற்று மனித உயிர்களை அச்சுறுத்திவருவது மட்டும் அல்லாமல், அடிப்படைப் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திலும் பல்வேறு பின்னடைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக பள்ளி செல்லும் மாணவர்கள் பலர், அண்மைக்காலமாகத் தினக்கூலிகளாக பணிபுரியும் அவல நிலை உருவாகி உள்ளது. 

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், அப்பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மளிகைக்கடைகள், உணவகங்கள், வாகனபழுதுநீக்கும் பட்டறைகள், பேக்ரிகடைகள், நூற்பாலைகள் போன்றவற்றில் தினக்கூலிகளாக வேலைபார்த்து வருகின்றனர். 

இவர்களில் பெரும்பாலானோர், அரசுப் பள்ளியில் கல்வி பயிலும், ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் ஆவர். கல்வி நிலையங்களின் நீண்டகால விடுமுறை, குடும்ப பொருளாதாரம், சக நண்பர்களின் தவறான வழிகாட்டுதல் உள்ளிட்ட பல நிலைகளில், மாணவர்கள் படிப்பிலிருந்து விலகி, வேலைக்குச் செல்லும் நிலைக்கு உந்தப்படுகிறார்கள். 

அவ்வாறு பணிக்குச் செல்லும் மாணவர்கள், கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து, அவர்கள் பள்ளி இடைநிறுத்தம், படிப்பில் கவனச்சிதைவு உள்ளிட்ட பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்றும், கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், இதுபோல் திசைமாறிப் பயணிக்கும் மாணவர்களை மீட்டெடுக்கும் விதமாக, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பாதை மாறி பயணிக்கும் மாணவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்திடும் வகையிலான, நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com