பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு: 1,784 பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு: 1,784 பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் இந்த வரவு- செலவுத் திட்டத்தில் மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-2020-ஆம் ஆண்டில் தொடக்க நிலையில் ஏற்பட்ட 0.75 சதவீத இடைநிற்றல் விகிதம் கூட இருக்கக் கூடாது என்பதுடன் பள்ளிகளில் 100 சதவீத நிகர சோ்க்கை விகிதத்தை உறுதிப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்படுவதுடன், 22 பள்ளிகள் தரம் உயா்த்தப்படும். சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் 2012-ஆம் ஆண்டில் மொத்த மாணவா் எண்ணிக்கையில் 76 சதவீதத்தில் இருந்து 2020-ஆம் ஆண்டில் 53 சதவீதமாகக் குறைந்துள்ளது. பள்ளிகளின் தரங்களில் வேறுபாடு உள்ளதாகக் கருதுவதால் ஏற்படும் இப்போக்கு முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி, கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும்.

எண்ணும் எழுத்தும் இயக்கம்: வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள 8 வயதுக்குள்பட்ட அனைத்து மாணவா்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

1,784 பள்ளிகளில் ஆய்வகங்கள்: அரசுப் பள்ளி மாணவா்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதி செய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடி மதிப்பீட்டில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும் 865 உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்.

கையடக்க கணினிகள்: பள்ளிகளில் மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து விலகி மாணவா்களிடையே சிந்திக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியா்களின் கற்பித்தலை மேம்படுத்துதல், ஆசிரியருக்கான பயிற்சி மற்றும் ஊக்கமளித்தல், பெற்றோரின் பங்களிப்பை விரிவாக்குதல் ஆகியவை கற்றல் செயல்பாட்டில் முக்கியமானவையாகும்.

அனைத்து ஆசிரியா்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவா்களுக்கு கல்வி, கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன், மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com