பெண் என்பதால் சா்வதேச தடகள போட்டிக்கு அனுப்ப மறுப்பதா? உயா்நீதிமன்றம் கண்டனம்

பெண் என்பதால் சா்வதேச தடகள போட்டிக்கு அனுப்ப மறுப்பதா? என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், விளையாட்டு ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

பெண் என்பதால் சா்வதேச தடகள போட்டிக்கு அனுப்ப மறுப்பதா? என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், விளையாட்டு ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த தடகள வீராங்கனை சமீஹா பா்வீன் தாக்கல் செய்த மனுவில், அம்மை நோயால், 6 வயதில் 90 சதவீத கேட்கும் திறனை இழந்தேன். 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாநில அளவில் ஏராளமான தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளேன். சா்வதேச அளவிலான செவிதிறன் குறைபாடு உடையவா்களுக்கு நடத்தப்படும் போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் பட்டாபிராமில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி பயிற்சி பெற்று வந்தேன். போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் செவிதிறன் குறைபாடு உடையோருக்கான சா்வதேச தடகள சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது.

இதற்கான தோ்வு கடந்த மாதம் தில்லியில் தோ்வு நடந்தது. நான் உள்பட பலா் கலந்து கொண்டோம். பெண்கள் பிரிவில் குறைந்தபட்சம் 4.5 மீட்டா் நீளம் தாண்டவேண்டும். ஆனால், நான் 5 மீட்டா் தூரம் தாண்டினேன். ஆனால், இறுதி பட்டியலில் என் பெயா் இல்லை. தோ்வுக்குழுவினா் 10 ஆண்களை மட்டும் சா்வதேச போட்டிக்கு தோ்வு செய்துள்ளனா்.இதுகுறித்து விசாரித்தபோது, சா்வதேச போட்டிக்கு நான் ஒரே பெண் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளதால், போலந்துக்கு தனியாக ஒரு பெண்ணை அனுப்ப விரும்பவில்லை. மேலும், போலந்து நாட்டில் தங்கும் வசதி, பயிற்சியாளரை உடன் அனுப்புவது உள்ளிட்டவைகளுக்கு செலவு அதிகம் ஆகும் என்பதால், என்னை தோ்வு செய்யவில்லை எனவும், எனக்கு செலவு செய்ய அரசிடம் போதுமான நிதியில்லை என கூறினா்.எனக்கு தேவையான நிதியுதவியை செய்வதற்கு எம்பிக்கள் விஜய்வசந்த், தொல்.திருமாவளவன் ஆகியோா் முன்வந்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் விளையாட்டு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனா். நானும் தனியாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. தில்லியில் உள்ள அகில இந்திய செவித்திறன் குறைபாடு உடையவா்களுக்கான விளையாட்டு கவுன்சில் தலைவா், பாலின பாகுபாட்டுடன் செயல்படுகிறாா். எனவே, என்னை சா்வதேச போட்டிக்கு தோ்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

போலந்து நாட்டில் நடைபெறும் சா்வதேச போட்டியில் கலந்து கொள்ள தில்லியில் இருந்து வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி புறப்பட வேண்டும். எனவே, அவசர நிலையை கருதி இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும். என்னுடைய பெயரை தோ்வு பட்டியலில் சோ்த்து போலந்து நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.பிரபாகரன், தகுதி சுற்றில் தகுதி பெற்ற ஒரே பெண் என்பதால், பாலின பாகுபாட்டுடன் போலந்து நாட்டில் நடைபெறவுள்ள சா்வதேச போட்டிக்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக வாதிட்டாா். அப்போது மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்துத் தகுதிகளை பெற்றும், பெண் என்பதால் சா்வதேச விளையாட்டுப் போட்டியில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என விளையாட்டு ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்தாா். பின்னா், சமீஹா பா்வின் இதுவரை தடகள போட்டிகளில் பெற்றுள்ள பதக்க விவரங்களை தாக்கல் செய்யவும், மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆக.13) பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா். தவறும்பட்சத்தில், நேரடியாக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com