பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்: தலைவர்கள் கருத்து

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைகோ: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இருக்கின்றார். 10 ஆண்டுக் கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடன் சுமை, நிதி நிர்வாக சீர்கேடுகள் அனைத்தையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மின்னணு கொள்முதல், அனைத்துத் துறைகளிலும் முழுமையாகக் கணினி மயம் போன்ற அறிவிப்புகள் மூலம், ஊழல் அற்ற நேர்மையான திறன் மிகுந்த அரசு நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்து இருக்கின்றார்.

மொத்தத்தில் பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கின்றது. வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம்.

கே.எஸ்.அழகிரி: தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பல அறிவிப்புகள், தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டு, நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை ஏறத்தாழ 59 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிற நிலையில், கடுமையான நெருக்கடியில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான பல்வேறு அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ராமதாஸ்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில்  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

இரா.முத்தரசன்: தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டும் அல்ல, நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் அரசின் நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

சு. திருநாவுக்கரசர்: 2021- 2022-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை இன்று தமிழக நிதியமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் மு.க. ஸ்டாலனின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களோடு சட்டமன்றத்தில் அளித்துள்ள வரவு செலவு திட்டத்தை வரவேற்று பாராட்டுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இந்த வரவு செலவு திட்டம் சிறப்பாக அமைந்துள்ளது.

ஜி.கே.வாசன்: 2021 – 2022 நிதியாண்டிற்கான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை. 

இருப்பினும் நிதிநிலை அறிக்கையில் உள்ள பாசன வசதி, வெள்ள தடுப்பு பணிகள், குடிநீர், குடியிருப்பு வசதி, அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, மீன்பிடித்துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட பலவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

தி.வேல்முருகன்: தமிழ்நாடு அரசின் 2021 - 2022 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பெட்ரோல் விலையை ரூ.3 குறைப்பு, அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டரங்குகள், இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகம் அமைப்பு, சுற்றுச்சூழல் கண்காணிக்கப்பு மையம், கிராமப்புற வீட்டு வசதிக்கு நிதி ஒதுக்கீடு,குக்கிராமங்களை மேம்படுத்த அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் நகரப்புற மேம்பாடு திட்டம், சாலை பாதுகாப்பு  உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும்.  

மொத்தத்தில், இந்த 2021-2022 நிதிநிலை அறிக்கை என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com