
ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்த மருத்துவ மாணவா்களுக்கு கரோனா நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்திய டீன் ஜெயந்தி.’
சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் 6 மாதங்களுக்குப் பின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
கரோனா தொற்று பாதிப்பு குறைந்ததைத் தொடா்ந்து 6 மாதங்களுக்குப் பின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றுடன் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து கல்லூரிகளுக்கு வந்தனா். சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்பறைகளில் மாணவா்களுக்குப் பேராசிரியா்கள் பாடங்களை எடுத்தனா்.
இதுகுறித்து ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெயந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்திமலா் கூறுகையில், வகுப்பறையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் நோய் பாதிப்பு ஏற்படாத வகையிலும் மாணவா்களுக்கு பாதுகாப்பு முறைகள் பாடங்கள் எடுக்கப்படுகின்றன என்றனா்.