
பாரா ஒலிம்பிக்: தங்கமகன் மாரியப்பன் மற்றும் குடும்பத்தாருடன் மோடி உரையாடல்
சேலம் : டோக்யோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் தங்கமகன் மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.
வருகிற 24-ஆம் தேதியில் டோக்யோவில் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள உள்ள மாரியப்பன் தங்கவேலுவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். தொடர்ந்து சேலத்தில் உள்ள அவரது தாயார் சரோஜா, தம்பிகள் குமார், கோபி ஆகியோருடன் பிரதமர் மோடி பேசினார்.
பெங்களூருவில் உள்ள மாரியப்பனிடம் பிரதமர் மோடி பேசும்போது, நடைபெற உள்ள போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லவேண்டும் என்று வாழ்த்தினார். அப்போது மாரியப்பன் பேசும்போது, சிறிய வயது முதல் தான் கஷ்டப்பட்டு படித்ததாகவும், விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதிலும் பயிற்சி எடுத்தேன். உயரம் தாண்டுதலில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர் சத்யநாராயணா, சாய் விளையாட்டு விடுதி அதிகாரிகள் எனக்கு பயிற்சி அளித்தனர். இதனால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறமுடிந்தது என்றும், அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேறி உள்ளேன் என்றார்.
பின்னர் பிரதமர் பேசும்போது மாரியப்பன் நாட்டிற்கு நல்லபெயர் எடுத்துத் தரவேண்டும் என்றார்.
தொடர்ந்து சேலம் பெரியவடகம்பட்டியில் உள்ள மாரியப்பனின் தாயார் சரோஜா, பிரதமர் மோடியிடம் கூறியது, இந்தியா மீண்டும் தங்கப் பதக்கம் எனது மகன்மூலம் பெறவேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக்கொள்கிறேன் என்றார்.
அதற்கு பிரதமர், நல்ல பிள்ளையை பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியதுடன், மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார் என்று கேட்க அவரோ, நாட்டுக்கோழி மற்றும் சூப் விரும்பி சாப்பிடுவார் என்றார்.
உங்கள் மகனை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றார் பிரதமர் மோடி.
மாரியப்பனுக்கு என்ன செய்யவேண்டும் என அவரது சகோதரர் குமாரிடம் கேட்டார். அதற்கு அவரோ மேலும் பல பரிசுகளை இந்தியா பெறவேண்டும் என விரும்புவதாக கூறினார். மற்றொரு சகோதரர் கோபியிடம் வணக்கம் என்று கூறிய பிரதமர் மோடி, உன் மனதில் என்ன உள்ளது என்று கேட்டார். அதற்கு கோபி, மாரியப்பன் மீண்டும் தங்கப்பதக்கம் பெறவேண்டும் என்றார். மாரியப்பன்போல் தாங்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மீண்டும் மாரியப்பனிடம் பேசிய பிரதமர் மோடி, மீண்டும் உங்களை பாராட்டுகிறேன். உனது தம்பிகள் முன்னேற முடிந்தளவு உதவுகிறேன் என்றார். தேசத்திற்கு உழைத்து வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.