மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.28 லட்சம் பேர் பயன்: மா. சுப்பிரமணியன்

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இரண்டு வாரக் காலத்திற்குள் 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.28 லட்சம் பேர் பயன்: மா. சுப்பிரமணியன்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1.28 லட்சம் பேர் பயன்: மா. சுப்பிரமணியன்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இரண்டு வாரக் காலத்திற்குள் 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18-8-2021) சென்னை கிண்டி கரோனா மருத்துவமனை நோயர்கள் பயன்பாட்டிற்கு எஸ்.கே.சி.எல். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒய்.எம்.ரெட்டி அவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பில் சி.எஸ்.ஆர். நிதியுதவியில் வாங்கப்பட்ட பேட்டரி கார் ஒன்றை வழங்கினார். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆக.5 ஆம் தேதி தமிழக முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி என்கிற கிராமத்தில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கிற மகத்தானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். அப்படித் தொடங்கி வைத்து இருவாரக் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சியை அத்திட்டம் அடைந்திருக்கிறது. நீரிழிவு, உயர்ரத்த அலுத்தம், டயாலிசிசிஸ், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு பிசியோதெரபி தேவைப்படுவோர், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருந்து வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுபவர்கள், நோய் ஆதரவு சிகிச்சை தேவைப்படுவோர் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகள்தோறும் தேடிச் சென்று மருத்துவம் பார்ப்பதும், அவர்களுக்குச் மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளிப்பதுமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று நான் திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் என்கிற கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் மருந்துப்பெட்டகங்களை வழங்கியிருக்கிறோம். இதுவரை 6, 7 மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களைத் தேடி மருத்துவத்தின் செயல்பாட்டை அறிந்து வந்திருக்கிறோம். மக்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். 
இன்று காலை 7 மணி வரை தமிழகம் முழுவதும் இருக்கிற 58,341 உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36,775 நீரிழிவு நோயாளிகள், 25,787 ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள், 3,715 நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், 3,725 பிசியோதெரபி நோயாளிகள் ஆகியோருக்கு அவர்கள் வீட்டிற்கேச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதோடு சிறுநீரகக் கோளாறால் வீட்டிலேயே முடங்கி இருக்கிற 18 சிறுநீரக நோயாளிகளுக்கு 18 சிறுநீரகப் பைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்திட்டம் தொடங்கி இரண்டு வாரக் காலத்திற்குள் தமிழகம் முழுவதிலிருந்தும் 1,28,361 தொற்றா நோயர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த 1,28,361 பயனாளிகளும் மிகுந்த சிரமத்தோடு மருத்துவமனைக்கு 10, 15 கி.மீ. செல்ல வேண்டுமென்கிற நிலை மாறி, அவர்களது வீடுகளுக்கே தேடிச்சென்று மருந்துகளைக் கொடுக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். 

தமிழக முதல்வரால், தொடங்கி வைத்திருக்கிற மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தால், இன்னும் 3, 4 மாதங்களில் தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கும் மேல் அந்த மருத்துவச் சேவை சென்று பயனடைய இருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com