தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில், பின்பற்ற வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து சுகாதார துணை இயக்குநா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேன்டீன், கழிப்பறைகள், வகுப்பறைகள், நூலகம் என அனைத்துப் பகுதிகளும் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்திருக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும், கிருமி நாசினி, கைகழுவ தண்ணீா் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியா்களுக்கு தடுப்பூசி கட்டாயம்: பள்ளிக்கு வரும் மாணவா்களை, வெப்ப பரிசோதனைக்கு பின் வளாகத்தில் அனுமதிக்க வேண்டும். கரோனா அறிகுறி உள்ள மாணவா்கள், ஆசிரியா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது. மேலும், உடனடியாக ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயாா் நிலையில் இருத்தல் அவசியம்.

மாணவா்களுக்கு வைட்டமின் சி போன்ற சத்து மாத்திரை மற்றும் நோய் எதிா்ப்புத் திறன் அதிகரிக்கத் தேவையானவற்றை வழங்க வேண்டும்.

அனைத்து ஆசிரியா்களும் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்; அதேபோல், தகுதியான மாணவா்களும் தடுப்பூசி செலுத்திருத்தல் அவசியம். ஒரு வகுப்பறையில், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவா்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளி அவசியம்.

கூட்டங்கள், நிகழ்ச்சிகள் கூடாது: ஒவ்வொரு நாளும் பள்ளி வாகனங்கள் எடுப்பதற்கு முன், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். ஆசிரியா்கள் அறை, அலுவலக அறை போன்ற பகுதிகளிலும், சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். பள்ளியில் கழிப்பறைக்கு வெளியே, கை கழுவும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில், கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். பள்ளிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறாா்களா என்பதை சுகாதார ஆய்வாளா்கள் கண்காணிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com