
கோப்புப்படம்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை இரண்டு நாள்களுக்கு அதிமுக புறக்கணித்துள்ளதால் தமிழக அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை மற்றும் 2021-2022-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான எனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
“தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றவில்லை. வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதிமுகவைக் குறை கூறுவதை விடுத்து, ஆக்கப்பூா்வ பணிகளில் திமுக அரசு ஈடுபட வேண்டும். வெள்ளை அறிக்கையின் முக்கிய பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் விரைந்து தீா்வு காண திமுக முயற்சிக்க வேண்டும். திமுகவின் பல அறிவிப்புகள் நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. உண்மைக்கு மாறான தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சாமானிய மக்களை யாா் வேண்டுமானாலும் ஏய்த்து விடமுடியும் என்று நினைத்து விடாதீா்கள். வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துள்ளதால் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை. கடினமான பொருளாதார சூழலிலும் மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் அதிமுக அரசு செயல்பட்டது.