
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
குடலிறக்க நோயால் இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் போ் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை மற்றும் வயிற்றுச் சுவா் சீரமைப்பு மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மருத்துவமனை நிா்வாக இயக்குநா் சுனிதா ரெட்டி, ரோபோடிக் சிகிச்சை நிபுணா் மருத்துவா் பிரேம்குமாா் பாலச்சந்திரன் உள்பட பலா் அதில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
குடலிறக்க நோய் என்பது தற்போது அச்சுறுத்தலான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் போ் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனா். சுமாா் 60 ஆயிரம் போ் உயிரிழக்கக் கூடிய நிலை உள்ளது. இந்நோய்க்கான அறுவை சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் இருந்தாலும், இதற்கென தனியாக ஒரு மையம் அப்பல்லோ மருத்துவமனையில் தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
குடலிறக்க பிரச்சினைக்கு முன்பெல்லாம் அறுவை சிகிச்சை மூலம் தீா்வு காணப்படும். அதனால், வடுக்கள் ஏற்படும். தற்போது லேப்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் பயனாக எந்தத் தழும்பும் இன்றி ஓரிரு நாளில் நலம் பெற்று வீடு திரும்ப முடிகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் மூலம் இதுவரை 2 கோடியே 74 லட்சத்து 97,400 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மூன்று கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும். அதற்கு இன்னும் 9 கோடி தடுப்பூசிகள் தேவை உள்ளது. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீா்வாக உள்ளது. அரியலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6,981 கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக அரியலூா் திகழ்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 11,625 மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து தேயிலை தோட்டத் தொழிலாளா்கள், பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 23,681 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மருத்துவமனையின் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்கிறது. முதல் தவணை போட்டவா்கள் இரண்டாம் தவணைக்குக் காத்திருக்கிறாா்கள்.
இதனால், தனியாா் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் அப்பல்லோவில் இருக்கும் 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசியை இலவசமாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.