
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி, புதுச்சேரியிலும் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளிலும் காலை 6 மணி முதல் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி நகர பகுதிகளான முத்தியால்பேட்டை, ராஜ்பவன், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உப்பளம் மற்றும் கிராம பகுதிகளான வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை, பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் மழையின்றி நீண்ட நாள்களாக வறட்சி நிலவி வந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள மழையால் சாலைகளில் மழை நீர் வழிந்தோடி குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது.