
ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமத்தில் உலாவும் யானைக் கூட்டம்
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமத்தில் செவ்வாய்கிழமை யானைக் கூட்டம் முகாமிட்டு குடியிருப்புக்களில் உலாவுவதால் மலைக் கிராமத்தினர் அச்சத்தில் முழ்கியுள்ளனர்.
சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் தேயிலைத்தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த கிராமங்களை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கருஞ்சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசிப்பிடமாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க | அமெரிக்க நிறுவனங்களுக்குத் தலைமை வகிக்கும் 8 இந்தியா்கள்!
தமிழகம் - கேரளம் ஆகிய மாநிலங்களுக்கிடையே அமைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே வனவிலங்குகள் இடம் பெயர்வது வழக்கம். தற்போது சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் கேரளப் பகுதியிலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஹைவேவிஸ் - மேகமலை பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது.
இதனால், ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் தபால் அலுவலம் அருகே திங்கள்கிழமை குட்டியுடன் 4 யானைகள் உலாவியது. நீண்ட நேரமாக அங்கேயே நின்ற யானைக் கூட்டம் செடி, கொடிகளை தின்று கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் தங்கள் கைபேசியில் புகைப்படம் எடுத்தனர்.
இதையும் படிக்க | வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.26,697 கோடி
மலைக்கிராமத்தினர் அச்சம்: சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீசனின் போது ஆண்டுதோரும் யானைகள் கூட்டம் கூட்டமாக ஹைவேவிஸ் - மேகமலை கிராமங்களுக்கு இடம் பெயர்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் இடம் பெயர்ந்த யானைக் கூட்டம் ஒன்று வழி தவறி மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் அச்சத்தில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
எனவே, சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் முகாமிட்டு குடியிருப்புகளில் உலாவும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.