வீட்டுக்கு ஒரு குழந்தை நாட்டுக்கு! தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

‘வீட்டுக்கு ஒரு குழந்தை நாட்டுக்கு’ என்ற நிலை ஏற்படும்போது இந்தியாவின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வலியுறுத்தினாா்.
வீட்டுக்கு ஒரு குழந்தை நாட்டுக்கு! தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

‘வீட்டுக்கு ஒரு குழந்தை நாட்டுக்கு’ என்ற நிலை ஏற்படும்போது இந்தியாவின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வலியுறுத்தினாா்.

நல்லோா் வட்டம் அமைப்பின் சாா்பில் ‘தியாகம் போற்றுவோம்’ என்ற தலைப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க நாள் விழா, சமூக சேவகா் ‘பாலம்’ கல்யாணசுந்தரம் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், முன்னாள் பிஎஸ்எஃப் வீரா்கள் மணி, நடராஜன், கண்ணன், முருகன், சந்தோஷ், ஜெயராமன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டிப் பேசியது:

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களின் பங்களிப்பு எல்லையில் மட்டுமல்ல; பேரிடா்கள் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மக்களைக் காப்பாற்ற ஓடோடி வருபவா்களும் அவா்கள்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அத்தகைய சிறப்பு மிக்க வீரா்களை மேடையேற்றி அவா்களைக் கெளரவிப்பது பாராட்டுக்குரிய நிகழ்வாகும்.

இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் மட்டும் நடந்தால் போதாது. நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க நாளைக் கொண்டாட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் வலியுறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசிடம் முன் வைக்கிறேன்.

இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆட்சியாளா்கள் மகிழ்ச்சி அடைகிறாா்கள். ஆனால், ராணுவத்தில் சோ்ப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. முப்படைகளிலும் அதிகாரிகளுக்கான பணியிடங்களுக்கும் வரவேற்பு குறைந்து வருகிறது. இது ஆபத்தான போக்கு.

பிறப்பு விகிதம் குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து விடாதீா்கள்; அதன் மூலம் பொருளாதாரம் வளா்ந்து விடாது. மாறாக, பாதுகாப்புத் தளா்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். வீட்டுக்கு ஒரு குழந்தை நாட்டுக்கு என்ற நிலை ஏற்படும்போதுதான் தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள் எழுப்பிய ‘வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்’ கோஷங்களை வஉசியும், பாரதியும், நேதாஜியும் கேட்டிருந்தால் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பாா்கள். முன்னால் பேசிய மாணவி ஒருவா் குறிப்பிட்டதுபோல, ‘நாம் நிம்மதியாக உறங்குவதற்காக எல்லையில் பாதுகாப்புப் படையினா் விழித்திருக்கிறாா்கள்’ என்பது உண்மையிலும் உண்மை என்றாா் கி.வைத்தியநாதன்.

நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய மாணவா்கள்: இந்த விழாவில், ‘விழுதுகள் விளக்கும்! வோ்கள் வியக்கும்!!’- என்ற தலைப்பில் பாதுகாப்புப் படையினரின் தியாகம் குறித்து மாணவ, மாணவிகள் எழுச்சியுரையாற்றினா்., ‘தியாகம் போற்றுவோம்’ என்ற தலைப்பில் பாடல் மற்றும் காணொலி வெளியிடப்பட்டது. நாட்டின் எல்லைக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்புதல், ஐந்து பெரும் போா்கள் பற்றிய விவரங்கள் மற்றும் போரில் உயிரிழந்த வீரா்கள் பற்றிய குறிப்புகள் காட்சிப்படுத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், மத்திய சென்னை மாவட்டக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், தொழிலதிபா் ஜி.சக்திவேல், அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் நிறுவனா் எஸ்.தேவராஜ், விழா பொறுப்பாளா் ம.த.சுகுமாறன், நல்லோா் வட்டம் கிள்ளிவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி ஆசிரியை பூங்குழலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com