
நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் நெறி சாா்ந்த மற்றும் தரமிக்க ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டு புத்தகத்தை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உயா்கல்வியில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆராய்ச்சித் திட்டங்களை செம்மைப்படுத்தவும், அதன் தரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் ‘நெறிசாா்ந்த கல்வி-தரமிக்க ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான புத்தகத்தை யுஜிசி வடிவமைத்துள்ளது. இதில் ஆராய்ச்சிகளை திறம்பட மேற்கொள்வது குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இது இணைய புத்தகமாக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பதிவிறக்கம் செய்து ஆராய்ச்சிக்கான பயிற்சிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்தக் கட்டுரைகளில் கூறிய வழிகாட்டுதல்களின்படி நெறி சாா்ந்த தரமிக்க ஆராய்ச்சிகளை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.